காலப்போக்கில் ஒரு நபர் வேலையை மாற்றும்போது, ஒவ்வொரு புதிய நிறுவனத்திலும் புதிய வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) கணக்குகள் திறக்கப்படலாம். இது ஒரே நபருக்கு பல பி.எஃப் கணக்குகள் உருவாக வழிவகுக்கிறது. சந்தாதாரர்கள் இந்த கணக்குகளை ஆன்லைனில் இணைக்க இப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனுமதிக்கிறது. இதன் மூலம் நிதி மேலாண்மையை மேம்படுத்துவதுடன், பணம் எடுப்பதும் அல்லது மாற்றுவதும் எளிதாகிறது.
பி.எஃப் கணக்குகளை இணைக்க வேண்டியதற்கான காரணம்?
பல கணக்குகளால் ஏற்படும் குழப்பத்தை இது தவிர்க்கிறது.
வட்டி கணக்கீட்டை துல்லியமாக்க உதவுகிறது.
பணம் எடுப்பது மற்றும் மாற்றுவதை விரைவாகவும், எளிதாகவும் இது செயல்படுத்துகிறது.
EPFO-வின் கூற்றுப் படி, இந்த செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஆக்டிவாக இருக்க வேண்டும். மேலும், ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்குடன் இது இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பி.எஃப் கணக்குகளை இணைப்பதற்கான முறை:
உங்கள் UAN-ஐ ஆக்டிவேட் செய்யுங்கள்:
உங்கள் UAN ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இதை நீங்கள் EPFO போர்ட்டலில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) சரிபார்க்கலாம்.
EPFO உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழையவும்:
EPFO-வின் யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலுக்குச் சென்று, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
'ஒரு உறுப்பினர் – ஒரு இ.பி.எஃப் கணக்கு (மாற்றக் கோரிக்கை)' என்பதற்குச் செல்லவும்:
'ஆன்லைன் சேவைகள்' (Online Services) ஆப்ஷனில், 'ஒரு உறுப்பினர் – ஒரு இ.பி.எஃப் கணக்கு' (One Member – One EPF Account) என்பதை கிளிக் செய்யவும். இந்தச் சேவை உங்கள் முந்தைய பி.எஃப் கணக்கை தற்போதைய கணக்கிற்கு மாற்ற அனுமதிக்கிறது.
தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும்:
உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற தனிப்பட்ட விவரங்கள் உங்கள் ஆதார் பதிவுகளுடன் பொருந்த வேண்டும். ஏதேனும் பொருந்தவில்லை என்றால், செயல்முறை தாமதமாகலாம்.
நிறுவனத்தை தேர்வு செய்யவும்:
கணக்கு மாற்றக் கோரிக்கையை சரிபார்க்க உங்கள் தற்போதைய அல்லது முந்தைய நிறுவனத்தைத் தேர்வு செய்யும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் KYC-யை அங்கீகரித்தவரைத் தேர்வு செய்யவும்.
கோரிக்கையை சமர்ப்பிக்கவும்:
சரிபார்ப்புக்குப் பிறகு, கணக்கு மாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். இதன் நிலையை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு ஐடி (tracking ID) உங்களுக்குக் கிடைக்கும்.
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்:
EPFO அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் ஆதார், உங்களுடைய UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதன் மாற்றங்களை 'டிராக் கிளைம் ஸ்டேட்டஸ்' (Track Claim Status) பிரிவின் கீழ் ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
EPFO பொதுவாக மாற்றக் கோரிக்கைகளை 10 - 15 வேலை நாட்களுக்குள் செயல்படுத்துகிறது.
EPFO கூறுவது என்ன?
EPFO சுற்றறிக்கைகள் மற்றும் அமைப்பின் இணையதளத்தில் கிடைக்கும் தகவலின் படி, ஆன்லைன் பரிமாற்றம் மற்றும் கணக்கு இணைப்பு ஆகியவை உறுப்பினர்களுக்கு பி.எஃப் மேலாண்மையை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமதமான அல்லது தோல்வியுற்ற பரிமாற்றங்களுக்கான குறை தீர்க்கும் வசதியையும் இந்த போர்டல் வழங்குகிறது.
பல பி.எஃப் கணக்குகளை இணைப்பது இப்போது ஒரு நேரடியான டிஜிட்டல் செயல்முறையாகும். உங்கள் UAN ஆக்டிவாகவும், KYC புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், உங்கள் ஓய்வூதிய சேமிப்பை மிகவும் திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் எந்த சிரமத்தையும் தவிர்க்கலாம்.