கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், அவை பலன்களை அள்ளித்தரும் ஒரு சிறந்த கருவியாகும். வெகுமதிகளை பெறுவதுடன், உங்கள் கடன் வரலாற்றையும் வலுப்படுத்த உதவும். ஆனால், கடன் சுமையில் சிக்காமல் இருக்க, நிலுவை தொகையை குறித்த நேரத்தில் செலுத்துவது, செலவுகளைக் கண்காணிப்பது, மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணங்களை புரிந்துகொள்வது அவசியம். பயனுள்ள கிரெடிட் கார்டு மேலாண்மைக்கு விழிப்புணர்வும், கட்டுப்பாடும் தேவை. அப்போதுதான் கிரெடிட் கார்டு ஒரு நிதிச் சுமையாக இல்லாமல், பயனுள்ள கருவியாக இருக்கும்.
உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டை எப்படி பயனுள்ள வகையில் மாற்றலாம் என்று தற்போது பார்க்கலாம்:
1. ஒவ்வொரு மாதமும் உங்கள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்துங்கள்:
ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை தொகையை, உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்திவிட வேண்டும். இதன் மூலம் நீங்கள் அதிக வட்டி விகிதங்களை தவிர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் அதிகரிப்பீர்கள். ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கை முழுமையாக செலுத்துவது, பண விஷயத்தில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுகிறீர்கள் என்பதை கடன் வழங்குநர்களுக்கு உணர்த்தும்.
2. கட்டண நினைவூட்டல்களை அமைத்துக்கொள்ளுங்கள்:
கட்டணத்தை தவறவிடுவது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு மட்டுமல்ல, தாமதக் கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பில்களை உரிய நேரத்தில் செலுத்த, நினைவூட்டல்களை அமைக்கவும் அல்லது தானியங்கி கட்டணத்தை (auto-pay) அமைக்கவும். இது உங்கள் நிதி நிலையைக் பாதுகாக்க உதவும்.
3. உங்கள் செலவுகளை ஆய்வு செய்யுங்கள்:
உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகளை தொடர்ந்து சரிபார்ப்பதன் மூலம் உங்கள் செலவு பழக்கங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க முடியும். பல வங்கிகள் இப்போது ஆன்லைன் திட்டங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை வழங்குகின்றன, அவை உங்கள் செலவுகளைக் கண்காணிக்கவும், நீங்கள் செலவுகளைக் குறைக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறியவும் உதவுகின்றன.
4. கடன் பயன்பாட்டு விகிதம் (Credit Utilisation Ratio):
கடன் பயன்பாட்டு விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். உங்கள் கடன் வரம்பைப் பொறுத்து, உங்கள் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவீதத்திற்கு குறைவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இது நீங்கள் பொறுப்புடன் கிரெடிட்டை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.
5. பல கார்டுகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது:
பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது பல சலுகைகளை வழங்கும், ஆனால் அவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது முக்கியம். குறுகிய காலத்திற்குள் பல கார்டுகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாகப் பாதிக்கப்படலாம். புதிய கார்டுகளைப் பெற வேண்டியிருந்தால், அவற்றை நீங்கள் நன்றாக நிர்வகிக்க முடியும் என்று தெரிந்தால் மட்டுமே பெறுங்கள்.