Economic Survey 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். 2025-2026 நிதியாண்டில் (FY26) ஜி.டி.பி (GDP) வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், கட்டுமானத் துறை அதிவேக வளர்ச்சியைக் காட்டியது, தொற்றுநோய்க்கு முந்தைய போக்கை விட சுமார் 15 சதவீதம் வளர்ச்சி கண்டது. ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (FSR), டிசம்பர் 2024 இன் படி, மொத்த வராக்கடன்கள் 2.6 சதவீதமாக 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், உலகளாவிய கூட்டு கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) தொடர்ச்சியாக பதினான்காவது மாதமாக தொடர்ந்து விரிவடைந்தது. சேவைத் துறையும் வளர்ச்சியைக் காட்டியது, அதே நேரத்தில் உற்பத்தி பி.எம்.ஐ சுருக்கத்தைக் குறிக்கிறது.
"பொருளாதாரத்தின் மொத்த தேவையின் கோணத்தில், நிலையான விலையில் தனியார் இறுதி நுகர்வு செலவினம் 7.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது கிராமப்புற தேவையின் மீள் எழுச்சியால் உந்தப்படுகிறது. ஜி.டி.பி.,யின் பங்காக தனியார் இறுதி நுகர்வு செலவினம் (தற்போதைய விலையில்) FY24 இல் 60.3 சதவீதத்திலிருந்து FY25 இல் 61.8 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பங்கு FY03க்குப் பிறகு அதிகபட்சமாகும். மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (நிலையான விலையில்) 6.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று ஆய்வறிக்கை கூறியது.
பொருளாதார ஆய்வு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமாகும், இது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் 2025-26 நிதியாண்டில் அதன் எதிர்காலம் பற்றிய விரிவான மதிப்பீட்டை வழங்குகிறது. வளர்ச்சி குறைதல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் நுகர்வு தேவை குறைதல் போன்ற முக்கிய முன்னேற்றங்களை இந்த ஆவணம் வழங்குகிறது. அடுத்த நிதியாண்டுக்கான கண்ணோட்டத்தை வழங்குவதோடு, பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்த கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது.