/indian-express-tamil/media/media_files/2025/06/10/8wraLixeo8dYU68eK97Z.jpg)
விஜய் மல்லையா, ஒரு காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபராக இருந்தார். அவரது தந்தை விட்டல் மல்லையாவிடமிருந்து ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யம், விஜய் மல்லையா வசம் வந்தது. இந்த சாம்ராஜ்யம் ஸ்டீல், மோட்டார்ஸ், மருந்துப் பொருட்கள் (Hoechst), உணவுப் பொருட்கள் (Kissan கெட்சப் மற்றும் சாஸ்கள்), மற்றும் பெயிண்ட்ஸ் (Berger Paints) போன்ற பல்வேறு துறைகளில் பரவியிருந்தது.
ஆனால், அவர் எடுத்த சில தவறான முடிவுகள் அவரை நஷ்டத்தில் தள்ளியது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கினார். இது ஒரு பெரிய தோல்வியாக முடிந்தது. கடன்களை வாங்கி இந்த நிறுவனத்தை நடத்தியதால், அவரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. இது அவரது வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, வரவு எட்டணா செலவு பத்தணா என்ற வகையில் வருமானத்திற்கு மிக அதிகமாக செலவு செய்தது, விஜய் மல்லையாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
விமான சேவையை மிக அதிக விலைக்கு வைத்திருந்ததால், பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. இதனால், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை சரியாக பராமரிக்க முடியாமல் போனது. எவ்வாறு தொழில் செய்ய வேண்டும் என்று தெரியாமல் அதனை செய்ததன் விளைவாக, 25 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை விஜய் மல்லையா இழந்ததாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் ரூ. 9,000 கோடிக்கு மேல் வங்கிகளிடமிருந்து கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு விஜய் மல்லையா சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது குறித்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அப்போதைய காலகட்டத்தில் பேசப்பட்டது. இது தவிர அரசியல் ரீதியான சில காரணங்களும் விஜய் மல்லையா வழக்கில் இருந்தது என்று கூறப்பட்டது.
எனவே, ஒரு நபர் எவ்வாறு தொழில் செய்யக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக விஜய் மல்லையா மாறிவிட்டார் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.