சமீப நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் விண்ணைத் தொட்டு வருகிறது. இப்படியே போனால், தங்கம் விலை எங்கே போய் முடியுமோ என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை மின்னல் வேகத்தில் அதிகரிப்பதற்கு காரணம் என்ன, வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார்.
இது குறித்து ஆனந்த் சீனிவாசன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “தங்கம் விலை இப்போது ஒரு கிராம் ரூ. 6200-ஐ தாண்டி விட்டது. ஜி.எஸ்.டி சேர்த்தால் ரூ. 6500-க்கு அருகே வந்துவிட்டது. செய்கூலி, சேதாரத்தை எல்லாம் சேர்த்தால் தங்கம் விலை மேலும் அதிகமாகவே இருக்கும். கடந்த 2019-ல் நான் தங்கம் குறித்து முதலில் பேசும் போது அதன் விலை ரூ. 3,200 என்ற ரேஞ்சில் தான் இருந்தது. இப்போது அதன் விலை ரூ.6,200-ஐ தாண்டிவிட்டது. CAGR-ஐ பார்த்தால் 15 சதவிகிதம் நமக்கு லாபம். தொடர்ச்சியாகத் தங்கத்தை நீங்கள் வாங்கி இருந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நானே இந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாட்டில் விலைவாசி எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ரூபாய் மதிப்பு குறைந்து இருப்பதையே இது காட்டுகிறது.
என்னிடம் 2019-ல் ஒரு 1000 கிராம் இருந்தது என வைத்துக் கொள்வோம். நான் லாக்கரில் வைத்து இருந்தாலே எனக்கு ஒரு கிராமுக்கு சுமார் ரூ.3000 லாபம். நான் எதுவும் செய்யாமலேயே எனக்கு ஐந்து ஆண்டுகளில் 33 லட்ச ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது. இதிலும் கூட நான் தங்கத்தை விற்றால் மட்டுமே 33 லட்ச ரூபாய்க்கு வரி போடுவார்கள். இல்லையென்றால் அதற்கும் வரி கிடையாது. இன்னும் அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்போது இந்த நிலைமை தான் நிலவுகிறது. அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் நிச்சயம் வட்டி விகிதத்தைக் குறைப்போம் எனப் பேசி வருகிறார். வேலையிழப்பு அதிகரித்தால் விலைவாசி கட்டுக்குள் வரவில்லை என்றாலும் வட்டி விகிதத்தைக் குறைப்போம் என்கிறார். அப்படி அவர்கள் வட்டி விகிதத்தைக் குறைத்தால் அது தங்கத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
ஓராண்டில் மட்டும் தங்கம் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். 2025-ம் ஆண்டுக்குள் தங்கம் ஒரு கிராம் 7500- 8000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருக்கு. அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்தாண்டு மூன்று முறையும் அடுத்தாண்டு நான்கு முறையும் வட்டி விகிதத்தைக் குறைத்தால் மொத்தம் 1.75% வரை வட்டி விகிதம் குறைந்து இருக்கும். அப்போது தங்கம் விலை உடனடியாக அதிகரிக்கும். இந்தியாவில் தங்கம் இல்லை. நாம் இறக்குமதி தான் செய்து கொண்டு இருக்கிறோம். எனவே, இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் நிலையில், தங்கத்தின் விலையை அது மேலும் அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 90-க்கு சரிந்துவிட்டால், தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் அசால்டாக ரூ.8000 தாண்டிவிடும்.
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இப்போது ரூ,83ஆக இருக்கிறது. இது அடுத்த 18 மாதங்களில் ரூ.86 வரை நிச்சயம் செல்லும். அவ்வளவு ஏன் ரூ.90 வரை கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நான் கண்டிப்பாகச் செல்லும் எனச் சொல்லவில்லை. இருந்தாலும் தங்கம் விலை வரும் காலங்களில் நல்ல ஏற்றத்தைச் சந்திக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கள் பொருளாதார ஆலோசகர்களைக் கேட்டு செயல்படுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.