/indian-express-tamil/media/media_files/2025/04/21/CfK9cm3LmOhZpCsY56FM.jpg)
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் முதலீடு செய்வதற்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் சரியாக இருக்குமா அல்லது குழந்தைகள் கல்வி மியூச்சுவல் ஃபண்ட் சிறப்பாக இருக்குமா என்ற குழப்பம் பலருக்கு நிலவுகிறது. இந்நிலையில், இத்திட்டங்கள் குறித்த தகவல்களை பொருளாதார நிபுணர் பத்மநாபன் விவரித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது எளிதில் அணுகக்கூடியதாகவும், அரசு ஆதரவுடன் வருவதால் நம்பகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. இத்திட்டம் தற்போது 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், இது வட்டி விகித ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்பட்டது மற்றும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது.
இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு மட்டுமேயானது. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குழந்தை 14 வயது அடையும் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் முடிந்த பிறகு, குழந்தையின் 21 வயதில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதாவது, முதலீட்டுக் காலத்திற்குப் பிறகு 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
உதாரணமாக, 14 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வீதம் ரூ. 21 லட்சம் முதலீடு செய்தால், ஆரம்பத்தில் ரூ. 39.4 லட்சம் கிடைக்கும். மேலும் 7 ஆண்டுகள் காத்திருந்தால், அது ரூ. 68.4 லட்சமாக உயரும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஆண் குழந்தைகளுக்கு இத்திட்டம் இல்லை என்பது ஒரு முக்கிய குறைபாடாகும்.
எனினும், செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு நிலையான வருவாயை வழங்கினாலும், அது பணவீக்கத்தை வெல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு மாற்றாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள குழந்தைகள் நிதிகள் (Children's Funds) குறிப்பிடத்தக்க அளவில் அதிக வருவாயை அளித்துள்ளன. அதே ரூ. 21 லட்சம் முதலீட்டை 14 ஆண்டுகள் செய்து, 7 ஆண்டுகள் காத்திருந்தால், ரூ. 1.13 கோடி முதல் ரூ.1.7 கோடி வரை வருவாய் அளித்துள்ளதாக பொருளாதார நிபுணர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் 21 ஆண்டு கால லாக்-இன் போலல்லாமல், 18 வயதுக்குப் பிறகு பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அதன்படி, ஏற்கனவே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், கணக்கைச் செயலில் வைத்திருக்க குறைந்தபட்ச தொகையான ரூ.500-ஐ ஆண்டுதோறும் செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று பத்மநாபன் பரிந்துரைக்கிறார். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ஒட்டுமொத்தமாக சிறந்த வருவாயை பெற உதவும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், எந்த ஒரு திட்டத்திலும் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பாக உரிய நிதி ஆலோசகருடன் ஆலோசனை மேற்கொண்டு, உங்களுடைய பொருளாதார நிலை அறிந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.