ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ), அதன் உறுப்பினர்களுக்கு பி.எஃப் கணக்கிலிருந்து தானியங்கி முறையில் முன்பணம் பெறுவதற்கான வரம்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்கள் தங்கள் பி.எஃப் கணக்கில் இருந்து திருமணம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு அவசர தேவைகளுக்காக முன்பணம் பெறும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை, தானியங்கி முறையில் ரூ. 1 லட்சம் வரை முன்பணம் பெறும் வசதி இருந்தது. கொரோனா காலத்தில், ஊழியர்களின் அவசர நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
தற்போதைய அறிவிப்பின்படி, இந்த தானியங்கி முன்பணம் பெறும் வரம்பு, ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பி.எஃப் உறுப்பினர்கள் எதிர்பாராத மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வித் தேவைகள் அல்லது திருமண செலவுகள் போன்ற அவசர நிதி தேவைகளின் போது, விரைவாகவும், எளிதாகவும் தேவையான பணத்தைப் பெற முடியும்.
மத்திய அரசின் இந்த முடிவு, ஊழியர்களின் நிதி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, அவர்களின் உடனடி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒரு முயற்சியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.