/indian-express-tamil/media/media_files/2025/10/16/epfo-clarifies-2-2025-10-16-09-42-42.jpg)
வேலை இல்லாத காலத்தில் வருங்கால வைப்பு நிதித் தொகையை முன்கூட்டியே முழுமையாகப் பெறுவதற்கான குறைந்தபட்ச கால அவகாசத்தை தற்போதுள்ள இரண்டு மாதங்களில் இருந்து 12 மாதங்களாக இ.பி.எஃப்.ஓ இப்போது அதிகரித்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வேலையிழந்த உறுப்பினர்களுக்கு நிதி திரும்பப் பெறுவது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. வேலை இழந்த உடனேயே, ஒரு உறுப்பினர் தனது நிதியில் 75% தொகையை உடனடியாக எடுக்கலாம் என்றும், ஒரு வருடம் வரை வேலையில்லாமல் இருந்தால், முழுத் தொகையையும் (100%) திரும்பப் பெறலாம் என்றும் இ.பி.எஃப்.ஒ புதன்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக ஊடக விமர்சனங்களுக்கு மத்தியில் வந்த விளக்கம்:
வேலையின்மை காலத்தில் பி.எஃப். நிதியை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான குறைந்தபட்ச கால வரம்பை தற்போதுள்ள இரண்டு மாதங்களில் இருந்து 12 மாதங்களாகவும், இறுதி ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான குறைந்தபட்ச கால வரம்பை இரண்டு மாதங்களில் இருந்து 36 மாதங்களாகவும் ஈ.பி.எஃப்.ஓ நீட்டித்ததால் ஏற்பட்ட சமூக ஊடக விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தக் விளக்கம் வந்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (ஈ.பி.எஃப்.ஓ-வை மேற்பார்வையிடும் அமைப்பு) வெளியிட்ட அறிக்கையில்: "வேலையை விட்டு வெளியேறிய உடனேயே 75% தொகையை எடுக்கலாம். ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்தால், முழுத் தொகையையும் எடுக்கலாம். முன்னதாக அடிக்கடி பணத்தை எடுத்ததால், சேவையில் ஏற்பட்ட தடைகள் காரணமாக பல ஓய்வூதியக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத் தொகையை இறுதித் தீர்வு செய்யும் நேரத்தில், ஊழியர்களிடம் மிகக் குறைவான பணமே மிஞ்சியது. இந்த ஏற்பாடுகள், ஊழியரின் சேவைத் தொடர்ச்சி, சிறந்த இறுதி பி.எஃப். தீர்வுத் தொகை மற்றும் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும்."
வேலை இழந்தவர்களுக்கு நிதி திரும்பப் பெறும் நிலையில் மாற்றம்:
சமீபத்தில் நடந்த 238வது கூட்டத்தில், ஈ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு, உறுப்பினர்கள் பி.எஃப். நிதியைப் பெறுவதை எளிதாக்கும் வகையில், திரும்பப் பெறும் வகைகளை 13-இலிருந்து மூன்றாக மாற்ற ஒப்புதல் அளித்தது:
அத்தியாவசியத் தேவைகள் (நோயுற்ற நிலை, கல்வி, திருமணம்)
வீட்டுத் தேவைகள்
சிறப்புச் சூழ்நிலைகள்
இருப்பினும், வேலையின்மையின் போது முன்கூட்டியே இறுதித் தீர்வு செய்வது போன்ற நிகழ்வுகளில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன:
குறைந்தபட்ச இருப்புத் தொகை: உறுப்பினர்கள் தங்கள் மொத்த பி.எஃப். நிதியில் 75% வரை எடுக்கலாம், ஆனால் மீதமுள்ள 25% தொகையை எப்போதும் குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும்.
இறுதித் தீர்வுக்கான காலக்கெடு நீட்டிப்பு: இதற்கு முன், ஓர் ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது முழு பி.எஃப். தொகையையும் திரும்பப் பெற முடிந்தது. தற்போது, முன்கூட்டியே இறுதித் தீர்வு செய்வதற்கான இந்தக் கால வரம்பை ஈ.பி.எஃப்.ஓ இரண்டு மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரித்துள்ளது.
விளக்கம் அளிக்கப்பட்டதன் மூலம், வேலையில்லாத ஒரு உறுப்பினர் 'சிறப்புச் சூழ்நிலைகள்' என்ற பிரிவின் கீழ், ஊழியர் மற்றும் முதலாளியின் பங்குகள் உட்பட 75% நிதியை எடுக்கலாம். மேலும், அவர் 12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், முன்கூட்டிய இறுதித் தீர்வு விதியின் கீழ் மீதமுள்ள 25% தொகையையும் எடுத்து 100% நிதியைப் பெறலாம் என்று தெளிவாகிறது.
பிற வகைகளுக்கான மாற்றங்கள்:
எளிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள்: நிதி திரும்பப் பெறுவதற்கான பிரிவுகள் தற்போதுள்ள 13-இலிருந்து அத்தியாவசியத் தேவைகள், வீட்டுத் தேவைகள், மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் என மூன்றாக மட்டுமே எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திரும்பப் பெறும் வரம்புகள்: கல்விக்காக ஒருவரின் உறுப்பினர் காலத்தில் 10 முறை பகுதி நிதி திரும்பப் பெறலாம். திருமணத்திற்காக 5 முறை எடுக்கலாம். இது இதற்கு முந்தைய மொத்த வரம்பான 3 முறை என்பதைவிட அதிகம். நோய் மற்றும் 'சிறப்புச் சூழ்நிலைகள்' பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே 3 முறையும் 2 முறையும் நிதி எடுக்க அனுமதிக்கப்படும்.
சேவைக் கால வரம்பு: நிதி எடுக்கத் தேவையான குறைந்தபட்சச் சேவைக் கால வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு வீட்டுத் தேவைக்கு 5 வருடங்கள், கல்வி மற்றும் திருமணத்திற்கு 7 வருடங்கள் குறைந்தபட்ச உறுப்பினர் காலம் தேவைப்பட்ட நிலையில், தற்போது 12 மாத ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர் காலம் இருந்தாலே நிதி எடுக்க முடியும்.
மாற்றங்களுக்கான காரணம் என்ன?
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈ.பி.எஃப்.ஓ தரவுகளின்படி, இறுதித் தீர்வு செய்யப்படும் நேரத்தில் சுமார் 50% ஈ.பி.எஃப் உறுப்பினர்கள் ரூ.20,000 க்கும் குறைவாகவே வைப்புத் தொகையைக் கொண்டுள்ளனர். மேலும், 75% ஓய்வூதியத் தொகைகள் 4 ஆண்டுகளுக்குள் திரும்பப் பெறப்படுகின்றன.
வேலையில்லாத நபர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முழு பி.எஃப். தொகையை எடுத்துவிட்டு, மீண்டும் மற்றொரு நிறுவனத்தில் சேருவதையும் ஈ.பி.எஃப்.ஓ-வின் தரவுகள் காட்டுகின்றன. முழுத் தொகையை எடுத்ததால், சேவையின் முடிவில் உறுப்பினர்களுக்கு மிகக் குறைவான பணமே மிஞ்சுகிறது. இதனால், அவர்களுக்கு ஓய்வூதியம் பெறவும் தகுதி கிடைக்காமல் போகிறது.
இந்த விதிமுறைகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதியாக எளிமைப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.