இபிஎஃப் எனப்படும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஒரு ஊழியர் செலுத்தும் சந்தாவில் 25 சதவீதத் தொகையை பங்குகளில் முதலீடு செய்யும் முடிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது உயர்வருவாய் பிரிவினரின் சந்தா தொகையில் இருந்து மட்டுமே இருக்கும் எனவும், மற்றவர்களின் சந்தாவில் ஏற்கனவே இருந்த வரம்பான 15 சதவீதம் என்பது அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.
சாமானிய மக்களான, நிறுவன மற்றும் அரசு ஊழியர்கள் பலரும் பங்குசந்தை குறித்து விழிப்புணர்ச்சி இல்லாதவர்களாக உள்ளனர். பங்குகளில் செய்யப்படும் முதலீடு நிச்சயமற்ற வருவாயையே ஈட்டும் என்பதோடு, இழப்பும் ஏற்படலாம் என்ற அச்சமுள்ளவர்கள் அதிகம். அதனால், இவர்கள் பங்குசந்தை முதலீட்டை முழுவதும் தவிர்க்க விரும்புகின்றனர்.
ஆனால், பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைப் போலவே அமைந்த, பொதுமக்களுக்கான திட்டமான என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைக்கும் ஆண்டு சராசரி வருமானம், பலரையும் ஆர்வம் கொள்ள வைக்கிறது. குறிப்பாக, இதில் தங்களது சந்தா தொகையில் இருந்து 50 சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பைத் தேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளதால், அதற்கு ஈடான அளவு வருவாய் இல்லாவிட்டாலும், இந்த இரண்டுக்குமான இடைவெளி குறைய வேண்டும் என்பது இபிஎஃப் திட்ட நிர்வாகிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, முதலீட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என கருதும் குறைந்த வருவாய் பிரிவினரைப் பொறுத்தவரை, அவர்களது சந்தா தொகையில் 15 சதவீதம் மட்டுமே பங்குகளில் முதலீடு செய்யும் திட்டம் தொடரும் அதே வேளையில், உயர் வருவாய் பிரிவினரது சந்தாவில் 25 சதவீதத் தொகையை பங்குகளில் முதலீடு செய்வது குறித்த முடிவு, விரைவில் நடக்க உயர்மட்டக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுவிடும் என, பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி வருகிறது.