ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் (EPF) இருந்து, ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வசதியை நடைமுறைப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், EPFO 3.0 என்ற அடிப்படையில் தனது தகவல் தொழிலெநுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடையும் எனக் கருதப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், பி.எஃப் வைப்பு நிதியில் இருந்து ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் நடைமுறை, இப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதும் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
“கடந்த 5-6 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.டி.எம் கார்ட் போல ஒரு அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளோம். வங்கி போன்ற வசதியை உருவாக்கவும் முயன்று வருகிறோம். மக்கள் தங்கள் சொந்த பணத்தை பெறுவதற்கு எதற்காக அனுமதி வேண்டும்? இந்த கேள்விக்கு பின்னணியில் தான் இந்த திட்டம் உருவானது” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை பெறுவதற்கான உச்சவரம்பு தீர்மானிக்கப்பட்ட பின்னர், பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது போல எடுத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) தற்போதுள்ள 12 சதவீத உச்சவரம்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை பயனாளிகள் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, இதன் கீழ் ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மட்டுமே பங்களிப்பதில்லை. பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் ஊழியரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் தக்க வைப்புத்தொகையில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். பணியாளரின் முழு பங்களிப்பும் இதற்கு செல்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“