ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, சமீபத்திய ஆண்டுகளில் பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டிய உரிமைகோரல்களுக்கு ஆட்டோ-செட்டில்மென்ட் அறிமுகப்படுத்தியது உட்பட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சூழலில், பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுமார் 60 சதவீதத்திற்கு அதிகமாக முன்கூட்டியே பணத்தை பெறுவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது இதற்கான வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா நேற்று ANI-யிடம் கூறினார். இந்த மாற்றம் கோடிக்கணக்கான பயனர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தவிர யு.பி.ஐ மற்றும் ஏ.டி.எம் வாயிலாகவும் பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான திட்டம் இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதங்களில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பாராத மருத்துவ செலவுகள் போன்றவற்றை ஈடுசெய்வதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆட்டோமேட்டிக் க்ளைம் செட்டில்மென்ட் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், திருமணம், கல்வி, வீடு தொடர்பான செலவுகளுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்டது. இந்த அட்வான்ஸ் தொகை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த முறையில் சுமார் 99.31 சதவீதம் கோரிக்கைகள் பெறப்பட்டு 3 நாட்களில் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
"தற்போது 60 சதவீதம் முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான கோரிக்கைகள் ஆட்டோ மோடில் பரிசீலனையில் உள்ளன. இவை மூன்று நாட்களில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிதியாண்டில் கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி அதிகபட்சமாக 2.16 கோடி ஆட்டோ க்ளைம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன" என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கடந்த மார்ச் 17-ஆம் தேதி கூறியிருந்தார்.