ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பான இபிஎஸ்-95 தேசிய போராட்டக் குழு தேசிய தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2014 முதல், இபிஎஸ்-1995 இன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 1000 ரூபாய் என மையம் நிர்ணயித்துள்ளது. இபிஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஓய்வூதியத்தை மாதம் 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துள்ளது.
அதாவது, ஏறக்குறைய 7.8 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவில்லை.
கோரிக்கை- ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பான இ.பி.எஸ்-95 தேசிய போராட்டக் குழு தேசிய தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
குழுவின் தலைவர் அசோக் ரவுத் கூறுகையில், “தற்போது, ஓய்வூதியம் பெறுவோர் சராசரியாக 1,450 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர், 3.6 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் மாதத்திற்கு 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே பெறுகின்றனர்.
எங்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
ஓய்வூதிய விதிகள் சொல்வது என்ன?
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிகளின்படி, இ.பி.எஸ்.ஸின் உறுப்பினர் 10 ஆண்டுகள் தகுதியான சேவையை முடித்திருந்தால், ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“