டாப் 10 நிறுவனங்கள் ஒன்றாக வந்தும் அசைக்க முடியாத உயரத்தில் பேஸ்புக், கூகுள்… விளம்பர வருவாயில் புதிய உச்சம்

பேஸ்புக், கூகுள் இரண்டின் ஒருங்கிணைந்த மொத்த விளம்பர வருவாய் 23,213 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை, பட்டியலிடப்பட்ட டாப் 10 ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த விளம்பர வருவாய் தொகையான ரூ.8,396 கோடியை விட அதிகமாக உள்ளது

சமீப காலமாக ஆன்லைன் விளம்பர வருவாய் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மற்ற ஊடக விளம்பர வாவாயை காட்டிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

விளம்பர வருவாயில் உச்சம் தொடும் டெக் நிறுவனங்கள்

குறிப்பாக மிகப்பெரிய டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் இரண்டின் ஒருங்கிணைந்த மொத்த விளம்பர வருவாய் 23,213 கோடி ரூபாய் ஆகும். இந்த விளம்பர வருவாய் தொகை, டாப் 10 ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த விளம்பர வருவாய் தொகை ரூ.8,396 கோடியை விட அதிகமாக உள்ளது என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

பேஸ்புக் இந்தியா மற்றும் கூகுள் இந்தியா ஆகியவை இணைந்து, உள்நாட்டு டிஜிட்டல் விளம்பர வருவாயில் 80 சதவீதம் வரை மூலதனம் செய்கின்றன.

கடந்த நிதியாண்டில் முதலிடத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட்

கடந்த நிதியாண்டில், பட்டியலிடப்பட்ட ஊடக நிறுவனங்களிலேயே மிகப்பெரிய சந்தை மூலதனத்தைக் கொண்டது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் ஆகும். அதன் மொத்த வருவாய் ரூ.7,729 கோடியாகும். இதில், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 48 சதவீதம் ஆகும். அதாவது, ரூ.3,710 கோடி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த தரவுகளுடன் ஒப்பிடுகையில் பேஸ்புக் இந்தியா மட்டும் 2020-21 நிதியாண்டில் 9,326 கோடி ரூபாயை விளம்பர வருவாயாக பெற்றுள்ளது. அதே நேரத்தில் கூகுளுக்கு 13,887 கோடி ரூபாய் விளம்பர வருவாய் தொகை கிடைத்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் விளம்பர வருவாய்

இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க்கிற்கு, கடந்த நிதியாண்டில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு விற்பனை மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 998.5 கோடியாகும். இது பேஸ்புக் இந்தியா அறிவித்த மொத்த விளம்பர வருவாயில் பத்தில் ஒரு பங்காகும்.

நிகர வருவாயில் சரிவை கண்ட பேஸ்புக், கூகுள்

இருப்பினும், பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா ஆகிய இரண்டும் ஊடக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது நிகர வருவாய், நிகர லாபம் போன்ற அம்சங்களில் பின்தங்கியுள்ளன. உதாரணத்திற்கு, பேஸ்புக்இந்தியா ரூ.1,481 கோடி நிகர வருவாயும், கூகுள் இந்தியா ரூ.6,386 கோடி நிகர வருவாயும் பெற்றுள்ளது. ஆனால், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் ரூ.7,729 கோடி நிகர வருவாயைப் பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

இதற்கு காரணம், பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா ஆகியவை இந்தியாவில் ஒரு விளம்பர மறுவிற்பனையாளராக செயல்படுகின்றன. அவர்கள் அமெரிக்க தலைமையகத்தின் உலகளாவிய துணை நிறுவனத்திடம் இருந்து சரக்குகளை வாங்கி, அந்த விளம்பர இடத்தை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் விற்பனை செய்கிறார்கள். இந்த செயல்பாடில் விளம்பர இடத்தை வாங்கும் உலகளாவிய துணை நிறுவனத்துக்கு தங்கள் மொத்த விளம்பர வருவாயில் ஒரு பங்கை செலுத்துகிறார்கள்.

பேஸ்புக் இந்தியா தனது மொத்த விளம்பர வருவாயில் 90 சதவீதம் வரை உலகளாவிய துணை நிறுவனத்திற்கும், கூகுள் இந்தியா 87 சதவீதம் வரையும் செலுத்துவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்றுகாலத்தில் அதிகரித்த டிஜிட்டல் உலகம்

இதுகுறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மொத்த விளம்பர வருவாயின் வளர்ச்சி, டிஜிட்டல் நோக்கிய இந்தியாவின் பயணம் காரணமாக இருக்கலாம். இது அன்றாட தேவைகளை வாங்குவதற்கு டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் மட்டுமல்லாது வணிகங்கள் மற்றும் பிராண்டுகளின் டிஜிட்டல் ஈடுபாடுகளையும் குறிக்கிறது. அதிலும், குறிப்பாக தொற்று காலக்கட்டம் டிஜிட்டல் மீதான ஆர்வத்தை மக்களிடம் அதிகரித்துள்ளது” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Facebook and google make more than top 10 media firms put together

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com