கடந்த மூன்று ஆண்டுகளில் பிக்சட் டெபாசிட் (FD)வட்டி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. மே 2020 முதல் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக உள்ளது. இது முதலீட்டாளர்களை வருமானம் ஈட்ட மாற்று வழிகளைத் தேட வழிவகுத்தது.
ஆனால், அண்மை காலமாக தேசிய வங்கிகள் உட்பட சில நிதி நிறுவனங்கள் தங்களது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்துவதை காணமுடிகிறது. எனவே, வங்கி பிக்சட் டெபாசிட் மூலம் அதிக வருமானத்திற்கான முதலீடு நுட்பங்களில் சிலவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
குறுகிய அல்லது நடுத்தர கால FD
வட்டி விகிதம் நன்கு குறைந்த பிறகு, மீண்டும் அதிகரிக்கும் போக்கை தொடங்கினால், நீண்ட கால பிக்சட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும் குறுகிய மற்றும் நடுத்தர கால FD-களில் மாற்றத்தை விரைவாக காண முடியும். குறுகிய அல்லது நடுத்தர கால முதிர்வு கொண்ட FDகளில் முதலீடு செய்வது அதிக FD விகிதத்திற்கு மாற உதவுகிறது.
ஒருவேளை வட்டி விகிதங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படும் போது, நீண்ட கால FDகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உயரும் வட்டி விகிதத்தின் பலனை இழக்க நேரிடும். வட்டி விகிதம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குறுகிய கால பிக்சட் டெபாசிட் திட்டங்களே சிறந்த தேர்வாகும்.
ப்ளோட்டிங் பிக்சட் டெபாசிட் விகிதம்
சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளோட்டிங் ரேட் பிக்சட் டெபாசிட்களை வழங்குகின்றன. தற்போதைய நிலையான விகித FDகளுடன் ஒப்பிடும்போது, ஃப்ளோட்டிங் ரேட் விகிதம் பெரிய வித்தாயாசம் இல்லை. இருப்பினும், விகிதம் அதிகரித்தால், ஃப்ளோட்டிங் ரேட் விகிதம் நல்ல வரவேற்பை பெறும்.
குறுகிய கால எஃப்டிகளை அவ்வப்போது அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மாற்றுவோருக்கு, ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் சிறந்த சாய்ஸ் ஆகும்.
வங்கி மற்றும் நிறுவனம் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, வங்கிகள் தங்கள் FD விகிதங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களும் FD-களின் விகிதங்களை அதிகரிக்கின்றன. உங்கள் முதலீட்டை வங்கிகள் மற்றும் நிறுவன FDகளில் பல்வகைப்படுத்துவது சிறந்த சராசரி விகிதங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இந்த முறையை பின்பற்றினால், உங்கள் முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும். நிறுவனத்தின் FDகள் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன, ஆனால் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் எந்த நிறுவனம் அதிக வட்டி தருவதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
கீழே உள்ள அட்டவணையில் வங்கிகள்,நிறுவனங்கள் வழங்கும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

பிக்சட் டெபாசிட் லாடரிங் முறை
FD லாடரிங் என்பது வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு மட்டுமின்றி FD களில் அதிக வருவாயை உறுதி செய்வதற்கான சிறந்தவழி ஆகும். உங்களது சொந்த பிக்சட் டெபாசிட் லாடரிங்கை உருவாக்கிட, வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும் பல பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதனை 1 ஆண்டு, 2 ஆண்டு, 5 ஆண்டு முதிர்வு காலம் என 5 பிக்சட் டெபாசிட் திட்டங்களாக பிரிக்க வேண்டும். முதிர்ச்சியின் போது, உங்களுக்குத் தேவை இருந்தால், பணத்தேவை இருந்தால், அதனை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.
FD லாடரிங் உத்தியை கையாள, வெவ்வேறு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் FD தொகையை தேர்வு செய்ய வேண்டும். வட்டி விகிதம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது, ஒவ்வொரு முதிர்வு காலத்திலும் அதிக வட்டி விகிதத்தை வழங்கும் FD திட்டங்களுக்கு மாறவேண்டும்.
எனவே, நீண்ட கால முதலீட்டில் அதிக வருவாயை உறுதி செய்யலாம். வெவ்வேறு வங்கிகளின் வைப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் FD லாடரிங் உருவாக்கையில், ஒவ்வொரு வங்கியிலும் ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீட்டுப் பலனைப் பெற முடியும்.
வட்டி விகித உயர்வுக்காக காத்திருக்க வேண்டாம்
FD களில் முதலீடு செய்வதற்கு நீங்கள் விகித உயர்வுக்காக காத்திருக்க வேண்டாம், ஏனெனில் விகிதம் எப்போது உயரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், பல முறை வட்டி விகிதம் உயரவும் வாய்ப்புள்ளது.
நீங்கள் முதலீடு செய்யும் வரை, உங்கள் கையிருப்பு பணம் மீதான வருமானத்தை இழப்பீர்கள். உங்கள் FD முதலீட்டில் இருந்து அதிகபட்ச பலனைப் பெற இந்த நுட்பங்களை முயற்சி செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil