/indian-express-tamil/media/media_files/2025/02/01/NkjKi6rHT5gIOSIE0fgF.jpg)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களை ஈர்த்து மூலதன வரவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: FDI in insurance hiked to 100%, paving the way for entry of foreign giants, inflows
காப்பீடடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு என்பது, 2047-க்குள் "அனைவருக்கும் காப்பீடு" என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தம் எனக் கருதப்படுகிறது. இது கணிசமான வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கும், ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும், நாடு முழுவதும் காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் இந்திய காப்பீட்டுத் துறைக்கு மிகவும் தேவையான மூலதனத்தை வழங்கக் கூடும். காப்பீட்டாளர்கள் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும். மேலும், உலகளாவிய காப்பீட்டாளர்களின் வருகையானது அதிநவீன இடர் மேலாண்மை நடைமுறைகள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தயாரிப்புகளை இந்திய சந்தைக்கு கொண்டு வரும்.
RenewBuy இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாலச்சந்தர் சேகர், "100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடவடிக்கை, இந்த துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை கொண்டு வர முடியும். காப்பீட்டில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் கணிசமான ஆர்வத்தை ஈர்க்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
"வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவு ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும். இது சிறந்த சேவைகள், அதிக தேர்வுகள் மற்றும் நுகர்வோருக்கு குறைந்த பிரீமியங்களுக்கு வழிவகுக்கும். அந்நிய மூலதனத்தின் வருகையால் காப்பீட்டுத் துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று காப்பீட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பல சர்வதேச காப்பீட்டாளர்கள் இப்போது இந்திய சந்தையில் நுழைய முடியும். இது இந்திய காப்பீட்டாளர்களை, தயாரிப்பு, செயல்முறைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பின்பற்ற தூண்டும். இது நுகர்வோருக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுக வழிவகுக்கும்" என்று சேகர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என இந்திய இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IBAI) தலைவர் சுமித் போஹ்ரா தெரிவித்துள்ளார். 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது போட்டி, மேம்பட்ட கண்டுபிடிப்பு, பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட அணுகல் மற்றும் காப்பீட்டாளர்களிடையே அதிக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வு சுதந்திரம் மற்றும் சிறந்த சேவையை இது அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.