/indian-express-tamil/media/media_files/2025/09/23/aavin-offers-festival-discount-2025-09-23-08-10-33.jpg)
ஆவின் பண்டிகைத் தள்ளுபடி: ஜி.எஸ்.டி. குறைப்பு சலுகை எங்கே? சமூக ஆர்வலர்கள் கேள்வி
ஜி.எஸ்.டி. 2.0 அமலுக்கு வந்த திங்கட்கிழமை அன்று, ஆவின் நிறுவனம் தனது சில பொருட்களின் விலையை குறைத்து உள்ளதாக அறிவித்தது. அரை கிலோ வெண்ணெய் ரூ.275-க்கு விற்கப்படுவதாகவும், இது தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களைவிட குறைவான விலை என்றும் ஆவின் தெரிவித்தது. ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்புடன் சேர்த்து, நெய்க்கு பண்டிகை தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690-லிருந்து ரூ.650 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 200 கிராம் பன்னீர் ரூ.110-க்கு கிடைக்கிறது
2021-ம் ஆண்டு தமிழக அரசு பாலின் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம், நுகர்வோருக்கு மொத்தமாக இதுவரை ஆயிரத்து 73 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்துள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலை மாற்றமின்றி நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தாத வகையில், பல்வேறு பால் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் ஆவின் கூறியுள்ளது. மேலும், 1 லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கியதன் மூலம் சுமார் 4 லட்ச விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், இது ரூ.635 கோடி என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் ஆவின் தெரிவித்துள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆவின் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இது தள்ளுபடி மட்டுமே என ஆவின் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்க தலைவர் ச.அ.பொன்னுசாமி கூறுகையில், "ஆவின், ஜி.எஸ்.டி. குறைப்பால் கிடைத்த பயன்களை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்கியதாகத் தெரியவில்லை. இதில் ஜி.எஸ்.டி. குறைப்பு எவ்வளவு, பண்டிகை தள்ளுபடி எவ்வளவு என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. சுற்றறிக்கையின்படி, இந்தத் தள்ளுபடி நவம்பர் மாத இறுதி வரை மட்டுமே நீடிக்கும். அதன் பின் ஆவின் விலையை உயர்த்தும்" என்று கூறி, இந்த விவகாரத்தில் மத்திய அரசும், ஜி.எஸ்.டி. கவுன்சிலும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆவினைப் போன்ற கூட்டுறவு நிறுவனங்களான அமுல் மற்றும் நந்தினி, ஜி.எஸ்.டி. குறைப்பினால் ஏற்பட்ட விலை மாற்றங்களை தெளிவாக விளக்க அட்டவணைகளை வெளியிட்டுள்ள நிலையில், ஆவின் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து நீக்கப்பட்டு, பால் உற்பத்தியாளர் விவசாயிகளிடமே அதன் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
அமுல் நிறுவனம் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டருக்கும் அதிகமான பாலையும், நந்தினி 1 கோடி லிட்டருக்கும் அதிகமான பாலையும் கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே கொள்முதல் செய்வதாகவும், இது 1 நாளைக்கு 40 லட்சம் லிட்டர் பாலை கையாளும் வசதி இருந்தும் மிகக் குறைவானது எனவும் பால்துறை நிபுணர் ஒருவர் தி இந்து நாளிதழிடம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.