employer’s contribution towards your PF account : தொழிலாளர்கள் வைப்பு நிதி சம்பளம் வாங்கும் ஊழியர்களின் மிக முக்கியமான சேமிப்பு தொகையாகும். பொதுவாக பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 12% பணத்தை பி.எஃப். சேமிப்பாக வழங்குகிறார்கள். அதே அளவு பணத்தை ஊழியர்களின் நிறுவனமும் பி.எஃப். கணக்கில் வைக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் 24% சேமிப்பும் ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கில் மொத்தமாக சேமிக்கப்படுவதில்லை. உங்கள் பி.எஃப். கணக்கின் பாஸ்புக்கை எடுத்து பார்த்தால் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்தும் பணத்தின் மதிப்பு தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும். கூடுதலாக அதில் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் (Employees Pension Sheme (EPS)) என்ற பிரிவில் உங்கள் சம்பளத்தில் இருந்து உங்களின் ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஊழியர்கள் இந்த பென்சனுக்கு தங்களின் பங்களிப்பை தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறுவனங்களின் பங்களிப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிதியானது பென்சன் திட்டத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. அடிப்படை சம்பளம் (ஓய்வூதிய நோக்கங்களுக்காக) ரூ .15,000 ஆக இருக்கும் பட்சத்தில் 8.33% சம்பளம் இ.பி.எஸ். திட்டத்திற்காக மாற்றிவிடப்படுகிறது. இதன் அர்த்தம், அடிப்படை சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ரூ. 1250 பணம் நிறுவனத்தின் பங்கில் இருந்து பென்சன் திட்டத்திற்கு வழங்கப்பட்டுவிடும்.
மாதாந்திர ஓய்வூதியத்தின் அளவானது ஊழியர் வேலை பார்க்கும் ஆண்டுகள் மற்றும் நிலையாக்கப்பட்ட கணக்கீடுகள் அடிப்படையில் அமைந்தது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருந்தால், ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ. 1000 என்று வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 7500 வழங்கப்படும். ஒருவர் எத்தனை வருடங்கள் பணியாற்றினார் என்பதற்கான கிரெடிட்டைப் பெறுவதை உறுதி செய்ய, உங்கள் சேவை காலத்தைப் பதிவு செய்ய EPFO க்கு உதவும் திட்டச் சான்றிதழை தேர்வு செய்யுங்கள்.
இ.பி.எஸ். என்ற ஓய்வூதிய திட்டம் வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்று கிடையாது. இதில் சேமிக்கப்படும் பணத்திற்கு வட்டி இல்லை. இ.பி.எஸ். பிரிவில் வைக்கப்படும் பணத்தின் முழு கார்ப்பஸூம் அரசாங்கத்திடம் இருக்கும். மேலும் ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு அதனை ஓய்வூதியமாக பெறுகிறார். ஊழியர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு செல்கிறார் என்றால் இ.பி.எஃப். புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். ஆனால் யு.ஏ.என். மாறாமல் இருக்கும். இந்த பணத்தை எடுப்பது அல்லது தொடர்ந்து இந்த திட்டத்தில் புதிய நிறுவனத்தின் பங்களிப்பை செலுத்த கூறுவது என இரண்டு தேர்வுகள் ஊழியருக்கு உள்ளது.
ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றவில்லை என்றால் அவர் இ.பி.எஸ். பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அல்லது திட்ட சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். புதிய நிறுவனத்தில் சேரும் போது, அந்த நிறுவனம் உங்களின் திட்ட சான்றிதழை இ.பி.எஃப்.ஓவுக்கு சமர்பிக்கும். 10 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகு திரும்பப்பெறும் நன்மை நிறுத்தப்படும். இ.பி.எஃப்.ஓவில் படிவம் 10-ஐ பூர்த்தி செய்து கொடுத்து திட்ட சான்றினை மட்டுமே பெற இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil