கல்வி, திருமணம், மருத்துவம், வீட்டுக் கட்டுமானம் அல்லது புதுப்பித்தல் போன்ற பல்வேறு செலவுகளை திறம்பட நிர்வகிக்க தனிநபர் கடன்கள் ஒரு பிரபலமான நிதி கருவியாகும். கடனை விரைவாக செலுத்துவது, கடனாளிகளுக்கு வட்டி செலுத்துதலில் கணிசமான தொகையைச் சேமிக்க உதவுவதுடன், அவர்களின் ஒட்டுமொத்த கடன் சுயவிவரங்களையும் மேம்படுத்தும்.
உங்கள் தனிநபர் கடனை விரைவாக திருப்பி செலுத்த உதவும் ஐந்து வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.
1. உங்களால் முடியும் போது கூடுதல் பணம் செலுத்துங்கள்:
குறைந்தபட்ச இ.எம்.ஐ-யை விட தொடர்ந்து அதிக தொகையை செலுத்த நீங்கள் முடிவு செய்தால் இது உங்கள் கடன் காலத்தையும், ஒட்டுமொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டியையும் கணிசமாக குறைக்கும். மாதம் ரூ. 2 ஆயிரம் கூடுதலாக செலுத்தினால் கூட நிதி சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
2. கடன் இருப்பு மாற்றங்களை தேர்வு செய்யுங்கள்:
உங்கள் தற்போதைய கடன் அதிக வட்டி விகிதத்தைக் கொண்டிருந்தால், நிலுவையிலுள்ள இருப்பை குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கும் மற்றொரு நிதி நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஒரு சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகருடன் சரியான ஆலோசனை மூலம் இதைச் செய்யலாம். மேலும், இந்த நடவடிக்கை உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ-களைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வட்டி சுமையைக் குறைக்கவும் உதவும்.
3. எதிர்பாராத வகையில் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்துங்கள்:
போனஸ், பரிசுத் தொகை என எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும் பணத்தை உங்கள் கடனில் செலுத்துங்கள். இது அசல் தொகை மற்றும் வட்டியை குறைக்க உதவியாக இருக்கும். இது உங்கள் கடன் திருப்பி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்யும்.
4. பல கடன்களை ஒருங்கிணைத்தல்:
கடன் ஒருங்கிணைப்பு என்பது பல கடன்களை ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட ஒற்றை கடனாக இணைக்கும் ஒரு யுக்தி. இந்த நடவடிக்கை, கடன் திருப்பி செலுத்துதலை எளிதாக்குகிறது. மேலும், செலுத்தப்படும் மொத்த வட்டியைக் குறைக்கவும் உதவும். கடன் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தெளிவு ஆகியவற்றால் மொத்த பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் குறைவதைக் காணும்போது, நீங்கள் கொஞ்சம் விரைவாக திருப்பி செலுத்த கவனம் செலுத்தலாம்.
5. உங்கள் கடன் வழங்குநருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்:
உங்கள் கடன் வழங்குநருடன் சரியான தொடர்பில் ஈடுபட வேண்டும். இந்த எளிய வழிமுறை உங்களுக்கு நியாயமான மற்றும் சாதகமான கடன் ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும். மேலும், உங்கள் கடன் வழங்குநருடன் நீங்கள் ஒரு நல்ல உறவையும், நம்பகமான திருப்பி செலுத்தும் தன்மையையும் பராமரித்திருந்தால், உங்கள் கடன் வழங்குநர் உங்கள் நிதி நிலைக்கு ஏற்றவாறு உங்கள் வட்டி விகிதத்தை அல்லது இ.எம்.ஐ-யை சீரமைக்க தயாராக இருக்கலாம்.