மலையாள மக்களின் ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பூக்கள் சாகுபடி பல்வேறு இடங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஓணம் பண்டிகை தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஓணம் பண்டிக்கை பூக்களின் வியாபாரம் தொடங்கி விடும்.
கோவையை பொறுத்தவரை தொண்டாமுத்தூர், வடிவேலாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஓணம் பண்டிக்கைக்கு முக்கியமாக திகழும் செண்டுமல்லி பூக்கள், கோழிக்கொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும்அண்டை மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
குறிப்பாக கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மலர் சந்தையில் இருந்து டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும்.
கோவை மக்களும் அதிகப்படியானோர் இங்கு வந்து தான் பூக்களை வாங்கி செல்வர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனை, விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால் மலர் சந்தையில் பூ வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பூக்கடை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபார சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், “கடந்த 3 - 4 வருடங்களாகவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் மலர் வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
கொரொனாவிற்கு பிறகு வியாபாரமே மாறிவிட்டது. முன்பெல்லாம் கோவையில் இருந்து தான் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அண்டை மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்ஃ
ஆனால் தற்போது மலர் உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கே சென்று பூக்களை வாங்கி கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி வேலை இழந்த இளைஞர்களும், குழுவாக பூ வியாபாரம் செய்ய தொடங்கி விட்டதாலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை நடைபெறுவதாலும் கடந்த சில வருடங்களாகவே மார்கெட் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்றார்.
மேலும், “300 டன் வரை பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் காலங்களை கடந்து தற்போது 30 டன் 40 டன் செல்வதே சிரமமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “மாநகராட்சி கட்டிக்கொடுத்த கட்டிடத்திற்குள் வரி செலுத்தி வியாபாரம் செய்கின்ற தங்களை விட சாலையோர பூ வியாபாரிகளுக்கு அதிகமாக வியாபாரம் நடைபெறுகிறது.
ரூ.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் எல்லாம் வெறும் 20 ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இனி ஓணம் பண்டிக்கைக்கு ஒரு வார காலமே இருக்கின்ற நிலையில் வியாபாரம் என்ன ஆகுமோ தெரியவில்லை” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.