வரி ஏய்ப்பு புகாரில் பாரத ஸ்டேட் பேங்க் ; மேலும் 3 வங்கிகளில் விசாரணை!

சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் நுண்ணறிவு ஆணையரகம் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்.சந்திரன்

தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகாரும், விசாரணையும் நடப்பது இயல்பு. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 4 பொதுத்துறை வங்கிகள் ஏடிஎம்களை வாங்கியது மற்றும் வாடகைக்கு பெற்றதில் வாட் வரி மற்றும் சேவை வரியில் தவறோ, முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து மத்திய அரசின் வருவாய் துறை சார்பில் விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் நுண்ணறிவு ஆணையரகம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வங்கிகளுக்கு ஏடிஎம்களை சப்ளை செய்து வந்த என்சிஆர், ஏஜிஎஸ் டிரான்ஸாகட், டாடா பேமண்ட்ஸ் சொலியூஷன்ஸ், ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதன்படி, மத்திய அரசின் வருவாய்த்துறை – ஏடிஎம்களை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் – என்னென்ன விதமான சேவையை அவை வங்கிகளுக்கு வழங்குகின்றன… அவற்றுக்கான கட்டணம் எவ்வளவு…. இந்த சப்ளைக்கான ஒப்பந்த விவரங்கள் என்ன போன்ற தகவல்களை உரிய ஆதார ஆவணங்களுடன் அளிக்குமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விளக்கங்களை மார்ச் 26ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தர வேண்டும் எனவும் வருவாய் துறையின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வரி விஷயத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதனால், பொதுத்துறை வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் அடுத்த பூகம்பம் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close