ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தனது ஆலை பணிக்கான விளம்பரங்களில் வயது, பாலினம், திருமண விவரம் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Foxconn tells India recruiters: Nix marital status in iPhone job ads
ஆப்பிள் சார்பில் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஆலை பணிக்கான விளம்பரங்களில் வயது, பாலினம், திருமண விவரம் உள்ளிட்ட தகவல்களை நீக்குமாறு தொழிலாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. உற்பத்தி நிறுவன பெயரையும் நீக்குமாறு நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் ஃபாக்ஸ்கான் ஆலை அமைந்துள்ளது. இதற்கான ஊழியர்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஃபாக்ஸ்கான் வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்நிறுவனங்கள் ஊழியர்களை தேர்வு செய்த பிறகு ஃபாக்ஸ்கான் இறுதி தேர்வு செய்கிறது. ஒரு ஊடகம், 2023 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரையான ஃபாக்ஸ்கான் நியமனம் குறித்த விளம்பரங்களை ஆய்வு செய்து, திருமணமாகாத பெண்கள் மட்டுமே வேலைக்கு உரியவர்கள் என தெரிவித்திருப்பதை கண்டறிந்தது.
இது ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவன கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான பிறகு, ஃபாக்ஸ்கான் மனிதவளத்துறை அதிகாரிகள், வேலை நியமன விளம்பரங்களை நிறுவனம் அளித்த தகவலுக்கு ஏற்ப அமைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிகிறது. பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள், விளம்பரங்களில் நிறுவன பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
திருமணமாகாதவர்கள் தேவை என குறிப்பிட வேண்டாம் எனவும், வயது, பாலினம் ஆகியவற்றையும் குறிப்பிடப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக வேலைக்கு ஆள்சேர்க்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும். இது தொடர்பான கேள்விகளுக்கு ஃபாக்ஸ்கான் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரங்களில், வயது, பாலினம் திருமண நிலை ஆகியவை நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“