/indian-express-tamil/media/media_files/2025/08/16/aravind-srinivas-2025-08-16-19-25-15.jpg)
சென்னை டூ சிலிக்கான் வேலி... கூகுள் குரோமை வாங்க முன்வந்த தமிழ் இளைஞன்!
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ, கூகுளின் குரோம் பிரவுசரை $34.5 பில்லியனுக்கு வாங்க முன்வந்து, கார்ப்பரேட் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த துணிச்சலான முயற்சியின் பின்னணியில் இருக்கும் பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ-யின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், எளிமையான சென்னை மாணவர் வாழ்க்கையிலிருந்து உலகளவில் அறியப்படும் தொழில் முனைவோராக உருவான கதை பலருக்கு உத்வேகம் அளிக்கிறது.
சென்னை டூ சிலிக்கான் வேலி:
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சென்னையில் வளர்ந்தவர். அங்கு, கடினமாகப் படிப்பது என்பது பொதுவான பழக்கமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே கணிதத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீனிவாஸ், கிரிக்கெட் புள்ளிவிவரங்களை ஆராய்வதன் மூலம் தனது கணிதத் திறனை மேலும் வளர்த்துக் கொண்டார். ஐஐடி மெட்ராஸில் சேர்வது அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்தது. தனது ஜே.இ.இ. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாவிட்டாலும், ஐஐடி-யில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே, அவர் மெஷின் லேர்னிங் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
ஐ.ஐ.டி-யில் படிக்கும்போது, Kaggle என்ற தரவு அறிவியல் தளத்தில் நடந்த போட்டியில் பங்கேற்றார். அதில் வெற்றி பெற்றதன் மூலம், மெஷின் லேர்னிங்கில் அவரது ஆர்வம் மேலும் உறுதியானது. பின்னர், பெங்களூரில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்தபோது, தனது திறமையால் பணியை விரைவாக முடித்தார். மீதமிருந்த நாட்களில், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆன்லைன் விரிவுரைகள் மூலம் மெஷின் லேர்னிங் பற்றி அவர் அதிகம் கற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அமெரிக்காவில் உள்ள UC Berkeley-யில் PhD பட்டம் பெற்ற அவர், ஓபன் ஏ.ஐ. மற்றும் கூகிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தார். இந்த காலகட்டத்தில், ஒரு அறையில் தான் மட்டும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிட்டார். "ஒரு அறையில் நீங்கள் மட்டுமே புத்திசாலியாக இல்லாதது ஒருவித ஆறுதலை அளிக்கிறது. ஐ.ஐ.டி.-யில் இருந்தபோது, நாம் தான் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு, அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று ஸ்ரீனிவாஸ் போட்காஸ்டில் தெரிவித்தார்.
ஓபன் ஏ.ஐ-யில் தனது இன்டர்ன்ஷிப்பின்போது, சிக்கலான யோசனைகளை விட எளிமையான யோசனைகள் சிறப்பாகச் செயல்படும் என்பதை அவர் கற்றுக்கொண்டார். இந்த அனுபவத்தின் அடிப்படையில், தனது நண்பர்களுடன் இணைந்து, 2022 ஆகஸ்ட் மாதம், பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ. நிறுவனத்தைத் தொடங்கினார். பாரம்பரிய தேடுபொறிகளைப் போல இல்லாமல், பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ., கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் பதிலளிக்கிறது. அதன் விரைவான வளர்ச்சி, கூகிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு அதை உயர்த்தி உள்ளது.
ஒரு சாதாரண சென்னை மாணவர், கடின உழைப்பு, அறிவுத் தேடல், மற்றும் துணிச்சலான முடிவுகள் ஆகியவற்றின் மூலம் எப்படி உலகளாவிய நிறுவனத்தின் தலைவராக உருவெடுத்தார் என்பதற்கு அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சிறந்த எடுத்துக்காட்டு.!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.