பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 2000 கொடுப்பதால், சில்லறை வழங்க முடியாமல் பெட்ரோல் நிலையங்கள் தவித்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி ரூ. 2000 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் வரும் செப்டம்பர்ச் 30 வரை வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானது முதல், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில், மக்கள் ரூ. 2000 கொடுத்து, சில்லறை வேண்டும் என்று கேட்பதால் பெரும் சிக்கல் ஏற்படுள்ளது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அனைத்திந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “ ரூ. 2000 கொடுத்து பெட்ரோல் வாங்குவோர் எண்ணிக்கை 90 % அதிகரித்துள்ளது. முன்பு இது வெறும் 10 % மட்டுமே இருந்தது. மேலும் ரூ. 100 அல்லது 200-க்கு பெட்ரோல் நிறப்பும் வாடிக்கையாளர்கள் கூட ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதால், சில்லறை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில், சில்லறை கொடுக்க குறைந்த பண மதிப்பு கொண்ட அதிக நோட்டுகளை ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டும் “ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”2016ம் ஆண்டு போல, ஒரு மோசமான நிலை மீண்டும் ஏற்படும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் வருமான வரி சோதனை நடந்ததுபோல், தற்போது நடக்குமோ என்ற பயமும் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட்டு மூலமோ, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அல்லது சரியான அளவில் பணத்தை கொடுத்து பெட்ரோல் வாங்குமாறு, அனைத்திந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“