ஜி7 உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் நடந்து வரும் இந்த மாநாட்டில் ஜி7 உறுப்பு நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், ஐக்கிய பேரரசு (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா (அமெரிக்கா) உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக தங்கம் இறக்குமதி செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தி முடக்கும் வகையில் ஏற்கனவே நேட்டோ நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது ஜி7 உறுப்பு நாடுகளும் இந்த புதிய தடையை அறிவித்துள்ளன.
ரஷ்யா இயற்கை எரிபொருளுக்கு அடுத்தபடியாக தங்கத்தைத் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்து, பெருமளவில் அந்நியச்செலாவணியை ஈட்டி வருகிறது. ஓர் ஆண்டில் உலகம் முழுதும் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 10%, அதாவது 350 முதல் 380 டன் வரையிலான தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இவற்றின் தோராய ஏற்றமதி மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பது சர்வதேச சந்தையில் எதிரொலிக்கும். ஏற்கனவே ரஷ்ய கச்ச எண்ணெய்க்கு தடை விதிப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிக்கப்பட்டால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்திடம் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற வர்த்தக மையங்களில் ரஷ்யாவின் தங்கம் தான் அதிகம் புழங்கி வருகிறது. இந்த நாடுகள் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய மறுக்கும் பட்சத்தில், உலகில் சீனாவிற்கு பிறகு அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவிற்கு தேவையான தங்கம் கிடைக்காது.
முன்னர் கணிக்கப்பட்டது போல, ஜி – 7 உச்சி மாநாடு, அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு வெளியீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கச்ச எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபேக் கூட்டம் ஆகியவை நிச்சயம் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.