தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ஆம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்திருந்தது. அன்று ஒருகிராம் ரூ.9,445-க்கும், சவரன் ரூ.75,560-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,375-ஆக உள்ளது.