/indian-express-tamil/media/media_files/2025/05/24/fGDQNQSefvY5eEPfYJo6.jpg)
ஒவ்வொரு நாளுமே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. சராசரியாக 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 லட்சம் என்று எடுத்துக் கொண்டால் கூட, ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ. 1 கோடியை கடந்து செல்கிறது. அந்த வகையில், தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது விலை குறையும் என்று காத்திருக்கலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
அதற்கான விளக்கத்தை புள்ளி விவரங்களுடன் பாஸ் வாலா தமிழ் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். தங்க நகை, தங்கக் கட்டிகள், தங்க நாணயம் என்று பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
1970-களில் இருந்து தற்போது வரை சுமார் 13 சதவீதம் வரை தங்கத்தில் இருந்து ரிட்டன் கிடைத்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, முதலில் தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று காண்போம்.
உதாரணமாக, உங்களுக்கு ரூ. 100 கிடைக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த ரூ. 100-ல் இருந்து சுமார் ரூ. 10 - ரூ. 12 வரை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்கம் இருக்கிறது.
கொரோனா தொற்று அதிகரித்து இருந்த காலத்தில் பங்குச்சந்தைகள் ஏறத்தாழ 38 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஆனால், அப்போதைய காலகட்டத்தில் 13 முதல் 14 சதவீதம் வரை தங்கம் ரிட்டன் கொடுத்தது. எனவே, தங்கத்தின் மதிப்பில் குறைவு இல்லை என்று அறிய முடிகிறது.
1970-களில் 23.8 சதவீதம் வரை தங்கம் ரிட்டன் கொடுத்துள்ளது. இது, 1980-களில் 5.2 சதவீதம்,1990-களில் 6.4 சதவீதம், 2000-களில் 15.1 சதவீதம், 2010-ல் 7.8 சதவீதம், 2020-களில் இருந்து தற்போது வரை 18.5 சதவீதம் என்ற விகிதத்தில் ரிட்டன் கிடைத்துள்ளது. இதன் சராசரியாக 1970-களில் இருந்து இன்றைய சூழல் வரை 13.3 சதவீதம் ரிட்டன் கிடைத்திருக்கிறது.
இப்போது, எந்த வகையில் தங்கத்தை வாங்கினால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற கேள்வி இருக்கும். அதன்படி, டிஜிட்டல் தங்கமாக வாங்கினால் தான் நல்ல லாபம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு இன்று நிறைய பேருக்கு இருக்கிறது.
இதில் கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டு என்று இரண்டு வகைகள் உள்ளன. கோல்டு இ.டி.எஃப் என்பது Exchange Traded Fund ஆகும். இது பங்குச்சந்தை போன்று செயல்படும். தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது, அதற்கான மதிப்பு கூடும். மேலும், விலை குறையும் போது, மதிப்பும் குறையும். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் இதே முறையில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
கோல்டு இ.டி.எஃப்-ல் நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யப்படும். ஆனால், கோல்டு மியூச்சுவல் ஃபண்டில் தங்கம் சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்யப்படும். கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்ய டிமேட் கணக்கு தேவைப்படும்; ஆனால், கோல்டு மியூச்சுவல் ஃபண்டிற்கு இது தேவை இல்லை.
எனவே, இவற்றில் உங்களுடைய நிதி தேவை மற்றும் முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ற வகையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.