/indian-express-tamil/media/media_files/2025/10/10/gold-price-prediction-india-2025-10-10-21-43-49.jpg)
'தங்கம் விலை படுமோசமாக குறையும்'... அடித்துச் சொல்லும் பாலாஜி பாண்டியன்!
தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள், விலை ஏற்ற இறக்கங்கள், மற்றும் நகை வாங்குவது தொடர்பான அத்தியாவசிய ஆலோசனைகளை பொருளாதார நிபுணரும், ஜி.என்.ஆர். கோல்ட் டிரேடர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான பாலாஜி பாண்டியன் வழங்கியுள்ளார்.
தற்போது சர்வதேச பொருளாதார காரணங்களால், குறிப்பாக அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சிக்கல் காரணமாக, தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு நிலைக்காது என பாலாஜி பாண்டியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அவரது கணிப்புப்படி, அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7,500 முதல் ரூ.8,000 என்ற அளவிற்கு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு விலை நிலையான ஏற்றத்தை காணும். எனவே, அவசரம் இல்லாத முதலீட்டாளர்கள் விலை குறையும் வரை காத்திருப்பது சிறந்தது என்றும், நீண்ட கால அளவில், தங்கம் இதுவரை 1% மட்டுமே ஏறியுள்ளதாகவும், வட்டிக்குச் செலுத்தும் பணத்தைப் போலவே தங்கத்தின் விலையும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தங்கம் vs. வெள்ளி: வெள்ளி நிலையான ஏற்ற இறக்கத்தைக் கொண்டதுடன், அதன் மதிப்பு குறையாது. அதிக அளவில் (Bulk) முதலீடு செய்ய விரும்புவோர் வெள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம். குறுகிய காலத்தில் அதிக லாபம் மற்றும் பயன்பாட்டிற்குத் தங்கமே சிறந்த முதலீடாக இருக்கும்.
தங்கம் vs. மியூச்சுவல் ஃபண்ட்: மியூச்சுவல் ஃபண்டுகளை விடத் தங்கமே பாதுகாப்பானது. முதலீடு செய்த பணத்தை நம்மால் பார்க்க முடியும்; மேலும், தேவைப்படும்போது அடகு வைத்தல், பணமாக்குதல் எனப் பல வழிகளில் பயன்படுத்த முடியும் என்கிறார் பாலாஜி பாண்டியன்.
நகை வாங்குவோருக்கான அத்தியாவசிய ஆலோசனைகள்
முதலீட்டு நோக்கங்களுக்காக நாணயங்கள் (Coins) வாங்குவதைத் தவிர்த்து, அணியக்கூடிய நகையாக வாங்குவதே பல வழிகளில் பயன் தரும். இது தேவைப்படும்போது அடகு வைக்கவும் உதவும். அரசாங்கம் அனுமதித்தாலும், 9 கேரட் தங்கத்தில் 37% மட்டுமே தங்கம் இருப்பதால், இதை வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். தரமான தங்கம் வாங்குவதே நீண்ட கால முதலீட்டிற்குச் சிறந்தது.
செய்கூலி, சேதாரம் என்பது உண்மையான சேதம் அல்ல. அது கடைகளின் நிர்வாகச் செலவுகள், விளம்பரச் செலவுகள், ஊழியர் சம்பளம் போன்றவற்றுக்கான கட்டணமாகும். எனவே, குறைவான சேதாரத்துடன் (2% - 3%) இருக்கும் பிளைன் டிசைன் நகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நகைக்கடைகளில் வாடிக்கையாளரின் கண் துடைப்பிற்காகவே பேரம் பேசுவது அனுமதிக்கப்படுகிறது. முதலில் விலையை ஏற்றிவிட்டு, பின்னர் குறைப்பதன் மூலம் தங்கள் லாபத்தைக் குறைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அட்சய திருதியை போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கையில் பணம் இருக்கும்போது, நல்ல நாள் பார்க்காமல் தங்கம் வாங்குவதே முதலீட்டுக்குப் பலன் தரும் என்கிறார் பாலாஜி பாண்டியன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.