தங்கம் விலை சவரனுக்கு ரூ.46,000 ஆக இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இந்த மாதம், மூன்றாம் தேதி சவரனுக்கு ரூ.45,648 ஆக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, மே 4ஆம் தேதி, தங்கம் சவரனுக்கு ரூ.46,000 ஆக இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்க நுகர்வில் உலக நாடுகள் வரிசையில், சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
ஆனால், இந்தியாவின் தங்க தேவையில் சுமார் 90% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை மாறும்போது இந்தியாவிலும் தங்கம் விலை மாறுவதை நம்மால் காணமுடிகிறது.
2022ஆம் ஆண்டில், இந்தியாவின் தங்க நுகர்வு 774 டன்களாக இருந்தது. இதில், 600 டன் தங்கம் இறக்குமதி மூலம் பெறப்பட்டவை.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம், டாலர் மதிப்பு மற்றும் பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தங்க விலையை நேரடியாக பாதிக்கிறது.
பொருளாதார வளர்ச்சி நல்லமுறையில் இருந்து, பங்கு சந்தைகள் அதிகரிக்கும்போது சர்வதேச முதலீடுகள் தங்கத்தில் இருந்து பங்கு மற்றும் கடன் பத்திரங்களுக்கு மாறுவது வழக்கம்.
இதன் காரணமாக, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை குறைந்தது. பொருளாதார வீழ்ச்சியினால் பங்கு சந்தைகள் சரியும்போது தங்கத்திற்கு மாறும் முதலீடுகளினால் தங்கம் விலை அதிகரிக்கிறது.
உக்ரைன் போரின் விளைவாக, அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டு விலைவாசி உயர்வு வெகுவாக அதிகரித்துள்ளது.
இதை சீர்செய்ய, வட்டி விகிதத்தை அமெரிக்க ரிசர்வு வாங்கி, ஒரே ஆண்டில் 4.75% அதிகரித்தது.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களில் நான்கு முக்கிய அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன.
புதன் அன்று, அமெரிக்க ரிசர்வு வாங்கி வட்டி விகிதத்தை 5% ஆக மேலும் அதிகரித்தது.
இதனால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில், அமெரிக்க பங்கு சந்தைகள் மற்றும் டாலர் மதிப்பு சரிந்துள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.81.71 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பங்கு சந்தையில் டவுன் குறியீடு 270 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச முதலீடுகள் தங்கத்திற்கு மாறி வருவதால், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil