இந்தியச் சமூகத்தில் தங்கம் செல்வத்தின் அடையாளமாக, அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை தினம் தினம் ஒரு உச்சம் தொட்டு சாதனை படைக்கிறது. சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே போகிறது. கார்ல் மார்க்ஸ் தங்கத்தை மஞ்சள் பிசாசு என்கிறார். ஏனென்றால், மற்ற வேறு எந்த உலோகத்தையும் விட தங்கம் பொருளாதாரத்தில் ஒரு பெரும் தாக்கத்தை செலுத்தக் கூடியது.
இந்தியாவில் மக்கள், பண்டிகைகள், விழாக்கள், குடும்ப விழாக்கள் என எல்லா நாள்களிலும் தங்க நகையை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், எந்த ஒரு பண்டிகை வந்தாலும் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து உள்ளது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்று மக்கள் கருதுகிறார்கள். அதனால், தங்க நகைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தங்கத்தின் விலையோ கேட்டவுட தலைசுற்றி மயக்கம் வருகிற அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.
இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 65 ரூபாய் அதிகரித்து 7,440 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 71 ரூபாய் அதிகரித்து 8,116 ரூபாயாக உள்ளது.
பொதுவாக தங்கம் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசு வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார மந்த நிலை, டிமாண்ட் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கம் விலையை பாதிக்கும் 7 காரணிகள் குறித்து ரெலிகேர் ப்ரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக அளவில் நிதி நிலைக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ்போர் போன்ற சில முக்கிய புவிசார் அரசியல் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை கடுமையாக சீர்குலைத்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பிரச்னையும் இன்னொரு சவாலாக கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84 ரூபாயை தாண்டி உள்ளது மற்றும் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. அக்டோபர் மாதம் 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 0.3 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தோராயமாக 1 சதவீதம் குறைந்துள்ளது.
வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் அறிக்கையின் படி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய தங்க இருப்பு 290 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கிகளின் நிகர தங்க கொள்முதல் 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் 483 டன்களை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்க பணவீக்கம் தொடர்ந்து 6-வது மாதமாக குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 2.4 சதவீதத்தை எட்டியது. 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இதுவே மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும். இதனால், தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
முதலீட்டு தேவை காரணமாகவும் தங்கம் விலை உயர்கிறது. 2024-ஆம் ஆண்டின், 2-வது காலாண்டில் கோல்ட் பார், கோல்டு காயின்கள் மற்றும் ETF-களுக்கான தேவை 254 டன்களாக நிலையாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலீட்டு தேவை 5 சதவீத சரிவை கண்டுள்ளது. இருப்பினும் கோல்ட் பார் முதலீடுகள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கிகளின் அதிகரித்த கொள்முதல் காரணமாக தங்கத்திற்கான தேவை 2024-ஆம் ஆண்டில் அதிகரித்தது. OTC முதலீடு உட்பட தங்கத்தின் தேவை 2-வது காலாண்டில் 4 சதவீதம் அதிகரித்து 1658 டன்களை எட்டியது.
உலகளாவிய வட்டி விகித குறைப்பு மற்றும் தங்க விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வட்டி விகிதங்கள் குறையும். இதுபோன்ற பல்வேறு காரணங்களை பொறுத்துதான் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால், சாமானிய மக்கள் ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பதுகூட ஒரு கனவாக மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.