Gold Silver Price Today, 23 July 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்று திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. இதேபோல், இன்று செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ.54,480-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைந்து ஒரு சவரன் ரூ. 52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,550-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ. 3.50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 92,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.