/indian-express-tamil/media/media_files/2025/08/20/gst-levy-on-health-life-insurance-2025-08-20-18-59-25.jpg)
காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி. நீக்க திட்டம்; அமைச்சர் குழு கூட்டத்தில் ஆதரவு
மத்திய அரசு, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை, 18% என்ற தற்போதைய நிலையில் இருந்து முற்றிலுமாக நீக்குவது குறித்து, ஒரு அமைச்சர் குழு (GoM) புதன்கிழமை ஆலோசித்தது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, இத்திட்டத்திற்கு சில மாநிலங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன எனினும், இத்திட்டம் இறுதி ஒப்புதலுக்காக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட குழுக்களிடம், அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள், இழப்பீடு, சுகாதார, ஆயுள்காப்பீடு, மற்றும் வரி விகிதங்களை சீரமைப்பது குறித்து விளக்கினார். பல்வேறு மாநில அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சௌத்ரி பேசுகையில், "ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டியை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதில் அனைத்து உறுப்பினர்களும் உடன்பட்டனர். இருப்பினும், சில மாநிலங்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தன. இத்திட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்த சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, நிதியமைச்சர் இத்திட்டங்களை அமைச்சர்களிடம் விளக்கினார். இத்திட்டங்களின்படி, பல்வேறு ஜிஎஸ்டி வரிகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்படும். மேலும், 'சின் மற்றும் டிமெரிட்' பொருட்களுக்கு (sin and demerit goods) 40% என்ற சிறப்பு வரி விதிக்கப்படும். இத்திட்டத்தின் விவரங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்புகள் குறித்து மாநில அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டு, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு முன், விரிவாக விவாதிக்குமாறு கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி விகித குறைப்பு பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் பணத்தை சேமிக்க உதவும். இந்த சேமிப்பு, பிற முதலீடுகளுக்கு வழிவகுத்து, பொருளாதார வளர்ச்சியை பெருக்கும் என்று கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை, வரி விகித சீரமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும், புதன்கிழமை கூட்டம் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடு தொடர்பான வரி குறித்த ஆலோசனைகளை மட்டும் மையப்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கூறுகையில், "விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி குறைப்பு இருக்கும். இது பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சேமிப்பை ஏற்படுத்தும். இதனால் சேமிக்கப்படும் பணம், முதலீட்டுக்கு சென்று, அதன் பலன்களை பலமடங்காகப் பெருக்கும்" என்றார். மேலும், இந்த மாற்றங்களால் மாநிலங்களுக்கு பெரிய அளவிலான இழப்புகள் இருக்காது எனவும், சில சிறிய சிக்கல்கள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
சூரியசக்தி துறையில் வரியை குறைப்பதன் மூலம் தனது மாநிலத்திற்கு சில இழப்புகள் இருந்தாலும், அது அந்த துறையை சர்வதேச அளவில் வளர்க்க உதவும் என்று ராஜஸ்தானுக்கு ஒரு உதாரணமாக அவர் கூறினார். "இத்திட்டங்கள் குறித்து மாநிலங்கள் விவாதித்து வருகின்றன. இன்றைய விவாதத்தின் முக்கிய அம்சமாக ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இருந்தது. வரி விகிதங்களை சீரமைப்பது குறித்து நாளை விவாதிக்கப்படும். நிதியமைச்சர் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அது எப்படி தொடர்ந்து வெளிவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
காப்பீட்டு பிரீமியங்களில் இருந்து ஜிஎஸ்டி வரியை நீக்குவது, அதை மலிவானதாக மாற்றி, மில்லியன் கணக்கான மக்களுக்கு நிதி பாதுகாப்பை மேம்படுத்தி, இந்தியாவில் காப்பீட்டு பயன்பாட்டை அதிகரிக்கும். ஆனால், ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனங்கள் இன்புட் டேக்ஸ் கிரெடிட் (ITC) பெறுதலை இழக்க நேரிடும். இதனால், நிறுவனங்களின் இயங்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.