எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு: வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு!

இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை  உயர்த்தியுள்ளது.

எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பால வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த சில மாதங்களாக புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் புத்தாண்டு அறிவிப்பாக, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, தற்போது, வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் இன்று(28.2.18) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது., அதில், 45 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி மீதான வட்டியை 5.25 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது.

அதே போல், ஒரு வருட வைப்பு நிதி மீதான வட்டியை 6.25 சதவீதத்தில் இருந்து 6.40 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2 முதல் 10 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 6இல் இருநந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வைப்பு நிதியின் மீது 6.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பல்க் டெப்பாசிட் மீதான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதலே(28.2.,18) செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும். எஸ்பிஐ- யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளுக்கு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close