"திட்டமிட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுங்கள்" : வங்கிகளுக்கு அரசு கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வாராக்கடன் அளவு 1,10,050 கோடி ரூபாய் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஆர்.சந்திரன்

வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, அதைத் திட்டமிட்டு திருப்பிச் செலுத்தமால் இருப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன், புகைப்படத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டு, வெளியுலகுக்கு அடையாளம் காட்டுங்கள் என மத்திய அரசு வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வங்கிகளின் நிர்வாக் குழுவைக் கூட்டி, அதில் தீர்மானம் இயற்றி, கடனைத் திருப்பிச் செலுத்தவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கான ஒப்புதலைப் பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2017 வரை, பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்பாக்கியைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 9,063 என தெரிய வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வாராக்கடன் அளவு 1,10,050 கோடி ரூபாய் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இது குறித்து வங்கிகளுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர்களின் பாஸ்போர்ட் விவரங்களையும் சேகரித்து வைக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அதிகம் தாமதிக்காமல், அடுத்த 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் வங்கிகளை நிதிச் சேவை துறை செயலர் ராஜூவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னொருபுறம், நாட்டைவிட்டு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் செலுத்த வேண்டிய தொகை 100 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், அவர்களது சொத்துகள் கையகப்படுத்தி, கடனை வசூல் செய்ய வகை செய்யும் சட்ட்த்தையும் மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

×Close
×Close