அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டின் போதும் திருத்தம் செய்து அறிவிக்கும். அந்த வகையில், ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு திருத்தங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி அஞ்சல ஆர்.டி. வட்டி விகிதங்கள் 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 6.2 சதவீதம் வட்டி பெற்றவர்கள் தற்போது 6.5 சதவீதம் வட்டி பெறுவார்கள்.
அதேபோல் ஓராண்டு டெபாசிட்களின் வட்டி விகிதம் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டு, 7 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்பு இது 6.9 சதவீதமாக இருந்துவந்தது.
எனினும், பிபிஎஃப் மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதமாக தொடர்கின்றன.
அதேபோல், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாக தொடர்கிறது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி) வட்டி 8 சதவீதமாக தொடர்கிறது. தொடர்ந்து, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவற்றின் வட்டி விகிதம் முறையே 8.2 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் ஆகும்.
மேலும், கடந்த (ஜனவரி-மார்ச்) காலாண்டிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர வருமான திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் அதிகரிப்பு இல்லை, மேலும் இது முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீதத்தை கொடுக்கும்.
மே முதல் ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 2.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இதனால் வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தத் தூண்டியது.
ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு தொடர்ச்சியான நாணயக் கொள்கைக் குழுக் கூட்டங்களில் கொள்கை விகிதத்தில் தற்போதைய நிலையை தொடர்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“