ஆர்.சதிரன்
கடந்த ஜூலையில், ‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான மறைமுக வரி’ என அறிமுகம் செய்யப்பட்ட, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மத்திய அரசு அதிரடியாக களம் இறங்கியுள்ளது.
இதன்படி, சமூக வலைதளங்களான டிவிட்டர், இமெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் சொல்லப்படும். இதற்காக, மத்திய நிதியமைச்சகத்தில், துணை ஆணையர் மட்டத்தில் உள்ள 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அரசு வலைதளங்களில் மட்டுமின்றி, டிவிட்டர், இமெயில் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பர். இது தவிர, மற்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் இவர்களை எட்டும் பட்சத்தில், அவற்றுக்கும் பதில் அளிப்பர். இந்த 8 அதிகாரிகளும், தொழில்நுட்ப ரீதியில் கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் என்றும், அதனால், இவர்களது முயற்சி, பங்களிப்பு மற்றும் அவர்கள் அளிக்கும் விவரங்கள் இன்றைய பிரச்னைகளைச் சமாளிக்க பேருதவி செய்யும் என நம்புவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.