ஆர்.சந்திரன்
மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் வழங்கப்படும் கிராயூவிட்டி எனப்படும் பணிக் கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையின் உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆகும். இப்போது உச்சவரம்பு 20 லட்சம் உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்தரைப்படி, இந்த மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், நீண்ட காலம் பணி செய்து ஓய்வு பெறும் ஒரு நபர், அந்நேரத்தில் பெறும் ஓய்வுகாலப் பலன்களில் பணிக்கொடையின் கீழ் பெறும் 20 லட்ச ரூபாய் வரை பெறலாம். இந்த தொகைக்கு வருமான வரிச் சலுகை பெறுவதும் இனி சாத்தியமாகும்.
பொதுவாக, பணிக் கொடை என்பது 5 ஆண்டுகளுக்குமேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஒருவர் ஓய்வு பெற்றாலோ, பணி விலகினாலோ, அதுவரை எவ்வளவு காலம் பணி செய்தார் என்பதை வைத்து கணக்கிட்டு வழங்கப்படும். அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் - அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி போன்ற இரண்டையும் இந்த பணிக்கொடை கணக்கிட எடுத்துக் கொள்வார்கள். ஓராண்டு பணிக்கு 15 நாள் சம்பளம் என்பதுதான் கணக்கு. பெண் ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதும், - தற்போதைய விதிமுறைகளின்படி, 26 வாரங்கள் வரையான விடுப்பு என்றால், - பணியில் இருந்ததாகக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கான பணிக் கொடை கணக்கிடப்பட வேண்டும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் பணியாளர்கள் தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்தால், இந்த பணிக்கொடை வசதி பெற தகுதியானவர்கள்.