80 ஆண்டு கால "பார்லே ஜி", எட்டா உயரத்துக்கு செல்லுமா பிஸ்கெட்களின் விலை?

பல இடங்களில் எங்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும், மற்ற பொருட்களைக் கொண்டு செல்ல..., எங்களது இருப்பை உறுதி செய்ய உதவுவதே இந்த பார்லே ஜிதான்

ஆர்.சந்திரன்

கிராமப்புற பெட்டிக்கடை முதல், மெட்ரோ நகரங்களின் மால்கள் வரை, எல்லா இடங்களிலும், எல்லாதரப்பு மக்களிடம் அறிமுகமான “பார்லே ஜி”யின் விலையை அதிகரிக்க அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிடுகிறார்கள். ‘ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பிஸ்கெட் விலை’ என இதை ஒதுக்கிவிட்டு நகர முடியாது. காரணம், இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் குறைந்தது 50 சதவீத மக்களின் கவனத்தையாவது ஈர்க்கும் வீச்சு கொண்டது – இந்த பார்லே ஜி பிஸ்கெட்.

பெட்டிக்கடைகளுக்கு ஏற்ப சின்னஞ்சிறு பிஸ்கெட்கள் கொண்ட 2 ரூபாய் பாக்கெட்டாகவும் கிடைக்கும்; 100 ரூபாய் கொடுத்து, 1 கிலோ எடை கொண்ட பெரிய பாக்கெட்டாகவும் வாங்கலாம் என்ற வாய்ப்பு கொண்ட – மாஸ் மார்கெட் எனும் விரிவான சந்தையைக் கொண்டது இந்த பிராண்ட். ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்தவுடன், பிஸ்கெட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்த பிஸ்கெட் தயாரிப்பு கட்டுபடியாகவில்லை என்கிறார்கள், இதன் தயாரிப்பாளர்களான பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தினர்.

ஜிஎஸ்டி அமலாவதற்கு முன் 12 சதவீத மதிப்பு கூட்டு வரிப் பிரிவில் இது இருந்துள்ளது. தற்போதைய 6 சதவீத வரி உயர்வு, ஏற்கனவே இந்த பிஸ்கெட்டின் மிகக் குறைந்த லாபத்தை காலி செய்து விடுவதால், விரைவில் இந்த பிஸ்கெட் பல மாற்றங்களைச் சந்திக்கும் என சொல்லப்படுகிறது. 2 ரூபாய் பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கெட்டின் எண்ணிக்கையை ஒன்று குறைப்பதும் யோசனைகளில் ஒன்று. ஆனால், இதனால் பெரும் பாதிப்பு வரும் என அஞ்சுகிறார்கள். மற்ற பெரிய சைஸ் பிஸ்கெட்டுகளில், அதாவது 10 ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட பாக்கெட்டுகளில் 4 சதவீதம் வரை விலையை உயர்த்த யோசனை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் இன்னொரு பிஸ்கெட்டான மேரி பிஸ்கெட்தான் பல குடும்பங்களில் டீயில் தொய்த்து சாப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. அனேகமாக, அதிலும் சில மாற்றங்கள் வரும் எனத் தெரிகிறது. ஆனால், பார்லே ஜியில் செய்யப்பட உள்ள மாற்றம், பெருவாரி மக்களை பாதிக்கும் என்பதால், அது குறித்த முடிவுதான் மிகவும் நுட்பமானது என இந்நிறுவனத் தரப்பில் சொல்லப்படுகிறது. “பல இடங்களில் எங்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும், மற்ற பொருட்களைக் கொண்டு செல்ல…, எங்களது இருப்பை உறுதி செய்ய உதவுவதே இந்த பார்லே ஜிதான் என்பதால், அதன் விலையில் செய்யப்படும் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

பொதுவாகவே எப்எம்சிஜி (FMCG)என சொல்லப்படும் வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்களின் சந்தை யுக்திகள்தான், பல புதிய வணிக உபாயங்களை முடிவு செய்கிறது. அதிலும் கிராமம் தொடங்கி, நகரங்கள் வரை நிறைந்துள்ள அடித்தட்டு மக்களை இலக்காகக் கொண்ட விரிவான சந்தையுடன் தொடர்புள்ள ஒரு பிராண்ட், தனது யுக்தியை எப்படி வடிவமைக்கிறது… அதனால் என்ன நடக்கிறது என்பது மேலாண்மை துறையினருக்கு, மட்டுமின்றி, பொதுவாகவே பலருக்கு ஆர்வத்தைத் தூண்டும் விஷயம். அந்த வகையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால், இந்திய பிஸ்கெட் சந்தையில் என்ன மாற்றம் வருகிறது என்பதற்கு பார்லே ஜி ஒரு சின்ன சாம்பிள்தான். மேலும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close