நாட்டின் ஜிஎஸ்டி வரிவசூல் செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் நிலவிவருவதால், ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், செப்டம்பர் மாதத்தில் ரூ.91,916 கோடி என்ற அளவிற்கு உள்ளது. கடந்த மாதத்தில் இது ரூ. 98,202 கோடி என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஜிஎஸ்டி வரிவசூல், ரூ.94,442 கோடி என்ற அளவில் இருந்தது . இது சதவீதத்தில் ஒப்பிடுகையில் 2.67 சதவீதம் குறைவு ஆகும்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்ட் வரியின் வருவாய் தொகை 98,202 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியது. அதற்கு முன்பு ஜூன் மாதமும் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகி இருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் செப்டம்பர் மாதமும் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.