ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து ரூ.1,16,393 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலானது, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.87,422 கோடியை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால் மே மாதம், பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றது. அப்போது, ரூ.92,849 ஆயிரம் கோடி வசூல் ஆனது.
இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,41,384 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. கொரோனா 2வது அலை குறித்த ஆபத்து இருந்தாலும், வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் ஊரடங்கு பிறக்கப்பட்டதே ஜூன் மாதம் ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கு காரணம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு ஜூலை 2021 ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது. மேலும் வரவிருக்கும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெலாய்ட் இந்தியா மூத்த இயக்குநர் எம்எஸ் மணி கூறுகையில், "ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பது பொருளாதார முன்னேற்றதை குறிக்கிறது. மேலும் வரும் மாதங்களில் சிறந்த வசூலை எதிர்ப்பார்க்கலாம்.உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகள் ஆகிய இரண்டிலும் ஜிஎஸ்டி வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய உற்பத்திகளில் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் காட்டியிருப்பதால், நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பதை காட்டுகிறது" என்றார்.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவை ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 25 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்த சில முக்கிய மாநிலங்கள் ஆகும். மொத்த ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் வருவாயை உள்ளடக்கியது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாவிட்டால் ஜிஎஸ்டி வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் & கோ பங்குதாரர் ரஜத் போஸ் கூறுகையில், "ஜூன் மாதத்தில் வணிக செயல்பாடுகள் அனுமதிக்கப்படாததால் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு கூர்மையான ஏற்றத்தைக் கண்டது. மூன்றாம் அலையை நாடு எதிர்க்க முடிந்தால், ஜிஎஸ்டி வசூல் இங்கிருந்து அதிகரிக்க வேண்டும், ”என்றார்.
2021 ஜூலை மாதத்தில் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி வருவாய் 22,197 கோடி ரூபாய் எனவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 28,541 கோடி ரூபாய் எனவும், சர்வதேச ஜிஎஸ்டி 57,864 கோடி ரூபாய் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 27,900 கோடி ரூபாயையும் சேர்த்து) எனவும், செஸ் வருவாய் 7,790 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.