நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று நள்ளிரவில் நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜிஎஸ்டி விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜிஎஸ்டி குறித்த சில விதிமுறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
**வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர் உள்ளீட்டு வரி கடன் எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும் அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.
**இரண்டாவது விற்பனை என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு. ஆன்லைன் மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
**கண்டிப்பாக ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் ரூ.100, அதிகபட்சமாக ரூ 5000 அபராதம் விதிக்கப்படும்.
**ஒரே நிரந்தர என்னில் (PAN number) இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
**டின் எண் பெற்றவர்கள் வாட் துறை கொடுக்கும் தற்காலிக ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஜிஎஸ்டி வலைத்தளத்தில் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம்.
**ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர்கள், அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால், வருவாய் வரம்பு இன்றி, எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும்.
**ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. ரூ.20 லட்சம் வரை மற்றவர்களுக்கு வேலை செய்து கொடுப்பப்வர்கள் (Job work) பதிவு செய்து கொள்ள தேவை இல்லை. அந்த வேலையை கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும். 180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும். அதேபோல், பதிவு செய்யப்படாத job worker-யிடம் job work கொடுக்கும் போது, ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.
**வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.
**வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, அதன் மொத்த மதிப்பு ரூ 50,000-த்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
**நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.