பிட்காயின் வணிகர்களில் பாதிக்கும்மேல் குற்றவாளிகள் : ஆய்வு முடிவு

மொத்த கிரிப்டோ கரன்ஸி வணிகத்தில் 25 சதவீதமும் குற்றத்தின் நிழலில் நடக்கின்றன எனவும் இவ்வாய்வின்படி தெரிய வருகிறது.

ஆர்.சந்திரன்

கிரிப்டோகரன்ஸி எனப்படும், ரகசிய நாணயங்களில் பிரபலமான, பிட்காயினின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேல் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

3 மேலாண்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவு, அண்மையில் வெளியானது. “செக்ஸ், டிரக்ஸ் மற்றும் பிட்காயின் : எவ்வளவு குற்றச் செயல்களுக்கு கிரிப்டோ கரன்ஸிகள் உதவுகின்றன” என்று பெயரில் வெளியாகியுள்ள இந்த முடிவுகளின்படி, பிட்காயின் வணிகத்தில் 51 சதவீதத்தை வைத்திருப்பவர்கள், எதாவது ஒரு குற்றச் செயல்களில் தொடர்பு உடையவர்கள். 44 சதவீத பிட்காயின் வணிகமும், மொத்த கிரிப்டோ கரன்ஸி வணிகத்தில் 25 சதவீதமும் குற்றத்தின் நிழலில் நடக்கின்றன எனவும் இவ்வாய்வின்படி தெரிய வருகிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிட்காயின் வணிகம் நடக்கிறது. இது அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் நடக்கும் போதைப் பொருள் வணிகத்தின் மதிப்புக்கு ஈடானது எனவும் அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது அண்மைய பட்ஜெட் உரையின்போது, கிரிப்டோ கரன்ஸி வணிகம் தவறான நபர்களிடம் உள்ளதாகவும், அது பொன்ஸி முதலீட்டு திட்டங்கள் போல, நம்பகத்தன்மையற்ற வணிகம் என்றும், இந்தியாவில், இதை தடை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் சூசகமாகத் தெரிவித்தார். அதையொட்டி, பிட்காயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒரு கட்டத்தில் 1 பிட்காயினின் சர்வதேச சந்தை மதிப்பு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றிருந்த நிலை மாறி, தற்போது 1 பிட்காயினின் மதிப்பு 8000 டாலருக்கு இறங்கிவிட்டது.

×Close
×Close