இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி லைஃப் சரல் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா-ஏஐஏ லைஃப் உள்ளிட்ட பல ஆயுள் காப்பீட்டாளர்கள் தங்களது சாரல் ஓய்வூதியத் திட்டங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் கிடைக்க வழி வகுக்கும் எளிமையான திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), காப்பீட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எளிமையான பென்ஷன் திட்டம்
40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாலிசி தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். பின்னர் ஆண்டுத்தொகை செலுத்த வேண்டும். ஆண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, கால் ஆண்டுவாரியாக, மாத வாரியாகவும் சந்தா செலுத்தலாம்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட தொகையாக மாதம் 1,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஓய்வு காலத்துக்குப் பிறகு, பென்ஷன் பணம் ஒருவருக்குக் கிடைக்கும்.
சாரல் பென்ஷன் திட்டம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முதல் திட்டத்தில் பென்ஷன் தொகை ஒருவரின் ஓய்வு காலத்துக்குப் பிறகு வழங்கப்படும். அவருடைய இறப்புக்குப் பிறகு மொத்தத் தொகை நாமினிக்கு வழங்கப்படும். இது சிங்கிள் லைஃப் ஆனுட்டி (Single life Annuity) வகை திட்டமாகும்.
மற்றொரு திட்டத்தில் ஒருவரின் ஓய்வு காலத்துக்குப் பிறகு, அவருக்கு பென்ஷன் வழங்கப்படும். அவருடைய இறப்புக்குப் பிறகு, அவரின் நாமினிக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். நாமினியும் இறந்துவிட்டால் மொத்த தொகை அவருடைய சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இது ஜாயின்ட் லைஃப் ஆனுட்டி (Joint life Annuity) வகை திட்டமாகும்.
வருடாந்திரத் திட்டங்கள் ஓய்வூதிய வயதை நெருங்கிய அல்லது ஓய்வு பெற்ற நபர்களுக்கு ஏற்றது. இந்த திட்டங்கள் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீழ்ச்சியடையும் வட்டி விகிதங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக செயல்பட முடியும் என்று HDFC லைஃப் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன் பார்த்தசாரதி கூறியுள்ளார். இத்திட்டத்தில் சேர்ந்த 6 மாதத்துக்குள் சரண்டர் செய்து ஓய்வூதியத் தொகையை பெற முடியும்.
இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட முதலீட்டுத் தொகைக்கு ஓய்வூதியம் பெறும் காலம் வரை முழுவதும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு ஒருவருக்கு வேறு எந்தவித வருமானமும் இல்லை என்றால், எந்த வரியும் இல்லாமல் முழு தொகையும் ஓய்வூதியமாக கிடைக்கும்.
திட்டத்தின் நன்மைகள்
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தேவையில்லை
வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது
பாலிசிதாரர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் புற்றுநோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பாலிசியை ஒப்படைக்கலாம்.
பாலிசி மூலம் கடன் பெறலாம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil