/indian-express-tamil/media/media_files/2025/04/26/UD8UQbaxfmKRQqzZkFb9.jpg)
நம்மை சார்ந்து இருக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால் நாம் எல்லோருமே மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும் என நிறைய பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் முக்கியமான மருத்துவ காப்பீடு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதில் முதலாவதாக தனி நபர் மருத்துவக் காப்பீடு இடம் பெறுகிறது. உதாரணமாக ரூ. 5 லட்சம் கவரேஜில் இந்த காப்பீடு எடுத்துக் கொண்டால், அந்நபருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் போது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திடமிருந்து மருத்துவ செலவுகள் செலுத்தப்படும். இந்த மருத்துவக் காப்பீடு, அதனை எடுத்துக் கொண்ட நபருக்கு மட்டுமே பொருந்தும்.
அடுத்தபடியாக, குடும்பநல மருத்துவக் காப்பீடு உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்து கொண்டால், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுகளும் இதில் அடங்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் குடும்பத்தில் யாருக்காவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால், காப்பீடு எடுத்துக் கொண்ட நிறுவனம் சார்பாக மருத்துவ செலவுகள் செலுத்தப்படும்.
இதையடுத்து, குழு மருத்துவக் காப்பீடு திட்டம் இருக்கிறது. இது பெரும்பாலும் நாம் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக கொடுக்கப்படும். இதில் நாம் செலுத்தக் கூடிய ப்ரீமியம் தொகை குறைவாக இருக்கும். ஆனால், நிறுவனம் சார்பாக எடுக்கப்படும் காப்பீடு திட்டத்தில், சில உடல் நல பாதிப்புகளுக்கான தொகை செலுத்தப்பட மாட்டாது. இதற்காக, தனி நபர் ஆரோக்கிய காப்பீடு எடுத்துக் கொள்வது சிக்கல்களை தடுக்க உதவும்.
இதேபோல், தீவிர நோய் மருத்துவக் காப்பீடு திட்டமும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு நபர் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு அவரால் பணியாற்ற முடியாத சூழல் உருவானால், ஒரு பெரிய தொகையை காப்பீட்டு நிறுவனம் அந்நபருக்கு வழங்கும். இந்த தொகையை மருத்துவ செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டங்களையும் நிறைய நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் செலுத்தப்படும் ப்ரீமியம் மற்ற திட்டங்களை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். இந்த காரணத்திற்காக தான், இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது மட்டுமின்றி, தினசரி மருத்துவ பணப் பயன் திட்டமும் இருக்கிறது. சிலருக்கு இருக்கும் உடல் நல பாதிப்புகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கக் கூடும். இது போன்ற நிலையில், குறிப்பிட்ட மருத்துவக் காப்பீடை எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த செலவுகளை சமாளிக்க முடியும்.
இறுதியாக, குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. எடுத்தக்காட்டாக, ஒரு நபர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். இதன் ப்ரீமியம் தொகை குறைவாக இருக்கும்.
எனவே, இந்த மருத்துவக் காப்பீடு திட்டங்களில் இருந்து நமக்கும், நம்முடைய குடும்பத்தினருக்கும் ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது பலன் அளிக்கும்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.