டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சமீப காலமாக அதிகளவில் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும்பொருட்டு பாதுகாப்பு அம்சம் நிறைந்த சிப் பொருத்திய கிரெடிட் மற்றூம் டெபிட் கார்டுகளை வழங்கும்படி அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
டெபிட் கார்ட் :
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும் காந்தக்கோடுகள் தற்போது உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருந்தது.
ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான வங்கிகள் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.