வைப்புத் தொகை மூலம் வாடிக்கையாளர்கள் நல்ல வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் கணக்கைத் தொடங்கி நிலையான வைப்புத்தொகையைச் செலுத்துவதன் மூலம், வட்டி விகிதம் சற்று அதிகமாகக் கிடைக்கும். உதாரணமாக சில பெயர் பெற்ற நிதி நிறுவனங்களில் 9 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அதேநேரம் நேரடியாக வங்கிக்கு சென்று வைப்புத்தொகை செலுத்தினால் 8.75 சதவீதம்தான் வட்டி. மேலும் சில வங்கிகள் 12 முதல் 24 மாத கால அளவுக்கான நிரந்தர வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டியே அளிக்கின்றன. இப்போது லாபம் 100 ரூபாய்க்கு 7.50 ரூபாய்.
வங்கி வைப்புத் தொகையில் பெறும் வட்டி சதவீதத்தை விட, தர மதிப்புச் சான்று பெற்றுள்ள நிறுவனங்களின் கார்ப்பரேட் டெபாசிட்டுகளில் செலுத்தும் வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக அளவில் வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள், இதற்கு 9 சதவீத வட்டியை அளிக்கின்றன.
நமது வருமானத்தில் வரிக்கழிவு (டிடிஎஸ்) செய்யப்படுவதாக உணர்ந்தால், 15 ஜி மற்றும் 15 எச் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது வரிக்குறைப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதோடு, வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது.
வருமான வரி வரம்பான 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நம் வருமானம் இருந்தால் மட்டுமே 15 ஜி, 15 ஹெச் படிவங்களை வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் குறைவாக இருப்பதால் ஊதியத்தில் வரிக்கழிவு செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக இந்த படிவங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருபவர்கள் இந்த படிவத்தை சமர்ப்பிக்கக் கூடாது.
ஃபிக்சட் டெபாசிட்டில், குமுலேட்டிவ் டெபாசிட் (கூட்டு வட்டி வைப்புத்தொகை) என்று ஒரு வகை உண்டு. இந்த வகை டெபாசிட்களில் கிடைக்கும் வட்டிக்கும் சேர்த்து அடுத்தமுறை வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக ஜனவரி மாதம் இதில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறீர்கள், ஆண்டுக்கு 8 சதவீத வட்டி. வழக்கமான வட்டி வருமானம் என்றால் பிப்ரவரி மாதம் 666.67 ரூபாய் கிடைக்கும்.
குமுலேட்டிவ் டெபாசிட்டில் பிப்ரவரி மாத அசல் ஒரு லட்சம், வட்டி 666.67 சேர்த்து 100666.67 ரூபாய்க்கு மார்ச் மாதம் வட்டி கிடைக்கும். இப்படியாக, முதிர்வின்போது வட்டிக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இந்த முறையில் அறிவித்திருக்கும் வட்டியைவிட குறைந்தபட்சம் 0.20 சதவீத வட்டி கூடுதலாகக் கிடைக்கும்.
நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் பெரிய பிரச்சினை, பணத்தை திருப்பி எடுப்பதுதான். முதிர்வு காலம் முடிவதற்குள் திரும்பப் பெறும் தொகைக்கு வங்கிகள் ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கின்றன. ஆகையால் அவசரத் தேவைக்காக நிரந்தர வைப்புத் தொகையில் கைவைத்தால், பணப்பையைக் கடிக்கும். வந்த வட்டி வருமானத்தில் நஷ்டம் ஏற்படும்.
ஆக பணத்தையும் பெருக விட வேண்டும், தேவையானபோது எடுக்கவும் வேண்டும்... என்ன செய்யலாம்? அதற்கு, பிரித்துப் போடுவது பலன் தரும். உதாரணமாக 10 லட்சம் ரூபாய் உங்களிடம் இருக்கிறது. அதை அப்படியே ஒரு நிலையான வைப்புத்தொகையாகப் போடுகிறீர்கள் என்றால், தேவையானபோது மொத்தத் தொகையையும் எடுக்க வேண்டி இருக்கும். எனவே, தலா ரூ. 5 லட்சமாக இரண்டு டெபாசிட் அல்லது தலா ரூ. ஒரு லட்சமாக 10 டெபாசிட் என பிரித்து முதலீடு செய்யுங்கள். தேவையான பணத்தை எடுக்கும்போது மீதத் தொகைக்கு வட்டி வரும். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி கிடைக்கும்.