வீடு, கார்களுக்கான வங்கி கடன் வட்டி உயரும் வாய்ப்பு

வங்கிகளுக்கான செலவு அடிப்படையில் கடன் வட்டி நிர்ணய முறையை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளின் அடிப்படை கடன் வட்டியுடன் இணைக்கும் முயற்சி நடக்கிறது.

ஆர். சந்திரன்

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கையின்படி, கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும், மற்ற பல காரணிகளால் வங்கிகளின் நுகர்வோர் கடன் வட்டி விகிதங்கள் விரைவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதித்துறை நிபுணர்கள் மற்றும் வங்கியாளர்களிடையே பேசும்போது, இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் குறைந்த வட்டி காலம் என்பது முடிவுக்கு வர உள்ளது. அமெரிக்காவிலும், மற்ற பல உலக நாடுகளிலும் நடப்பது போலவே இந்தியாவிலும் கடந்த காலமாக பொதுச்சந்தையில் நிலவும் வட்டி அதிகரித்துள்ளது. வங்கிகள் தங்களது தேவைக்காக நிதித்திரட்ட தற்போது கூடுதல் வட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி பெருந்தொகை டெப்பாசிட்டுகளுக்கு கடந்த 2 மாதங்களில் 2 சதவீதம் வரை வட்டியை உயர்த்தியுள்ளன. மற்ற பல வங்கிகளுக்கும் இதே நிலைதான். அதனால், இந்த வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டியை அவை நீண்ட நாட்களுக்கு குறைத்து வைத்திருப்பது இயலாது. அண்மையில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கிக் கடன்கொள்கையிலும் கூட, அதன் எதிரொலியை காண முடிந்தது.

வங்கிகளுக்கான செலவு அடிப்படையில் கடன் வட்டி நிர்ணய முறையை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளின் அடிப்படை கடன் வட்டியுடன் இணைக்கும் முயற்சி போன்ற பலவும் காட்டும் திசை இதுதான். எனவே, வரும் மாதங்களில் வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன” என கருத்து தெரிவிக்கின்றனர்.

அதனால், வங்கிக்கடன் பெற்றுள்ளவர்களும், பெறும் முயற்சியில் உள்ளவர்களும் உரிய ஆலோசனை பெற்ற பின், காரியத்தில் இறங்குவது நல்லது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close