பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்களது வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை (EMI) குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இவ்விரு வங்கிகளும், எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of Funds-based Lending Rate) எனப்படும் நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்துள்ளன. இதன் மூலம், வட்டி விகிதங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்கள்:
பேங்க் ஆஃப் பரோடா, ஓவர்நைட் எம்.சி.எல்.ஆர்-ஐ 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் மூலம், வட்டி விகிதம் 8.15% இலிருந்து 8.10% ஆகக் குறைந்துள்ளது. மற்ற காலங்களுக்கான எம்.சி.எல்.ஆர் விகிதங்களில் மாற்றம் இல்லை. ஒரு மாத எம்.சி.எல்.ஆர் 8.30% ஆகவும், மூன்று மாத எம்.சி.எல்.ஆர் 8.50% ஆகவும், ஆறு மாத எம்.சி.எல்.ஆர் 8.75% ஆகவும், ஒரு வருட எம்.சி.எல்.ஆர் 8.9% ஆகவும் தொடர்கிறது. இந்த புதிய விகிதங்கள் ஜூலை 12, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
கடந்த வாரம் வெளியான செய்திக் குறிப்பில், பேங்க் ஆஃப் பரோடா தனது வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை ஆண்டுக்கு 7.45% ஆகக் குறைத்திருந்தது. மேலும், வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் (processing fee) ரத்து செய்துள்ளதால், வீட்டுக் கடன் வாங்குவது மேலும் எளிதாகியுள்ளது.
கனரா வங்கி வட்டி விகிதங்கள்:
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியும் தனது எம்.சி.எல்.ஆர் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட எம்.சி.எல்.ஆர் விகிதங்களின்படி, ஓவர்நைட் எம்.சி.எல்.ஆர் 8% இலிருந்து 7.95% ஆகவும், ஒரு மாத எம்.சி.எல்.ஆர் 8.05% இலிருந்து 8% ஆகவும் குறைந்துள்ளது. மூன்று மாத எம்.சி.எல்.ஆர் 8.25% இலிருந்து 8.20% ஆகவும், ஆறு மாத எம்.சி.எல்.ஆர் 8.60% இலிருந்து 8.55% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு வருட எம்.சி.எல்.ஆர் 8.80% இலிருந்து 8.75% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டு மற்றும் மூன்று வருட எம்.சி.எல்.ஆர் விகிதங்களும் தலா 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, தற்போது முறையே 8.90% மற்றும் 8.95% ஆக உள்ளன. இந்த புதிய விகிதங்கள் ஜூலை 12, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
பிற வங்கிகளின் எம்.சி.எல்.ஆர் குறைப்பு:
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவையும் எம்.சி.எல்.ஆர் குறைப்புகளை அறிவித்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது எம்.சி.எல்.ஆர் விகிதங்களை சில கடன் காலங்களுக்கு 30 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது எம்.சி.எல்.ஆர் விகிதங்களை அனைத்து காலங்களுக்கும் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்தியன் வங்கி தனது எம்.சி.எல்.ஆர் விகிதங்களை சில காலங்களுக்கு 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது, இந்த புதிய விகிதங்கள் ஜூலை 3, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.