வருமான வரித்துறையின் புதிய கண்காணிப்பு; வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகளால் கண்காணிக்கப்படும் நிதி நடவடிக்கைகள்!

வருமான வரித் துறை, வரி ஏய்ப்பைக் கண்டறிய, அனைத்து பெரிய நிதிப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்த அறிக்கையை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரித் துறை, வரி ஏய்ப்பைக் கண்டறிய, அனைத்து பெரிய நிதிப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்த அறிக்கையை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
Income Tax

வருமான வரித்துறையின் புதிய கண்காணிப்பு; வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகளால் கண்காணிக்கப்படும் நிதி நடவடிக்கைகள்!

உங்களுடைய அனைத்து பெரிய நிதி பரிவர்த்தனைகளும் இனி வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும். பெரிய அளவிலான ரொக்கப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு செலவுகள், சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை, வெளிநாட்டு பயணச் செலவுகள் என அனைத்தும் அரசின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்காக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் (SFT) குறித்த சிறப்பு அறிக்கையை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

Advertisment

இந்த அறிக்கையானது, வரி செலுத்துபவரின் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வரித் துறை எளிதாக நிதி நடவடிக்கைகளைக் கண்காணித்து, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க முடியும். வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பதிவாளர்கள், பிற அமைப்புகளால் SFT-ல் பதிவிடப்படும் விவரங்கள், வரி செலுத்துபவரின் ஆண்டுத் தகவல் அறிக்கையில் (Annual Information Statement - AIS) தானாகவே பதிவாகிவிடும். இந்த நிறுவனங்கள் அடுத்த நிதியாண்டின் மே 31-க்குள் இந்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு:

இந்த நிதியாண்டில், 2025-26-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரி செலுத்துபவர்கள் TDS, AIS மற்றும் SFT தொடர்பான அனைத்து தகவல்களை சரியான நேரத்தில் பெற்று, எந்தவொரு பிழையும் இன்றி வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

SFT என்றால் என்ன?

வருமான வரித் துறை, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக SFT முறையை அமல்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, இது ஆண்டுத் தகவல் அறிக்கை (Annual Information Return - AIR) என அழைக்கப்பட்டது. சட்ட வல்லுநரும் சார்டட் அக்கவுண்டன்டுமான டாக்டர் சுரேஷ் சுரானா இதுகுறித்து கூறுகையில், “வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 285BA மற்றும் விதி 114E ஆகியவற்றின் கீழ், வருமான வரித் துறை SFT அறிக்கையிடும் முறை மூலம் சில அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கிறது. இந்த SFT-ஐ சமர்ப்பிக்கும் பொறுப்பு, வங்கிகள், நிதி நிறுவனங்கள், பதிவாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற குறிப்பிட்ட அமைப்புகளுக்கு உள்ளது” என்று விளக்கினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

இந்த நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை படிவம் 61A-ல் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நிதியாண்டின் மே 31-ஆம் தேதி SFT தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும்.

கண்காணிக்கப்படும் 5 முக்கிய பரிவர்த்தனைகள்:

டாக்டர் சுரானா SFT-ன் கீழ் வரும் 5 முக்கிய பரிவர்த்தனைகள் குறித்து விளக்கினார். 

பெரிய அளவிலான ரொக்கப் பரிவர்த்தனைகள்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் ரொக்கம் வைப்பு அல்லது எடுப்பது அல்லது சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கம் வைப்பது.

கிரெடிட் கார்டு பணம் செலுத்துதல்: ரொக்கமாக ரூ.1 லட்சத்திற்கு மேல் அல்லது ஒரு வருடத்தில் மொத்தமாக ரூ.10 லட்சத்திற்கு மேல் செலுத்துதல்.

முதலீடுகள் தொடர்பான கொள்முதல்: பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள், பத்திரங்கள் அல்லது ரிசர்வ் வங்கிப் பத்திரங்களை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் வாங்குவது.

சொத்து பரிவர்த்தனைகள்: ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அசையா சொத்துக்களை (பிளாட், நிலம் போன்றவை) வாங்குவது அல்லது விற்பது.

அன்னிய செலாவணி/பயணச் செலவுகள்: வெளிநாட்டு நாணயங்களை வாங்குவது அல்லது வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவிடுவது. இந்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் நேரடியாக வருமான வரித் துறைக்குச் சென்று, வரி செலுத்துபவர்களின் வருமானம் மற்றும் செலவினங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதங்கள்:

டாக்டர் சுரானாவின் கூற்றுப்படி, “SFT-ஐ சமர்ப்பிக்கத் தவறினால், பிரிவு 271FA-ன் கீழ் தினமும் ₹500 அபராதம் விதிக்கப்படும். நோட்டீஸ் காலாவதியான பிறகு தினமும் ₹1,000 ஆக அபராதம் அதிகரிக்கும். தவறான SFT சமர்ப்பித்தால், ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். வரி செலுத்துபவர்களுக்கு, பொருந்தாத தகவல்கள் இருந்தால், நோட்டீஸ், மறுமதிப்பீடு மற்றும் வருமானத்தில் கூடுதல் தொகை சேர்க்கப்படும் என்றார்.

வரி செலுத்துவோருக்கான அறிவுரை:

இன்றைய உலகில், வருமான வரித் துறை ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணித்து வருகிறது. வரி செலுத்துபவர்கள் ITR தாக்கல் செய்யும்போது கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். SFT-ல் உள்ள பரிவர்த்தனைகள், அவர்களின் அறிவிக்கப்பட்ட வருமானம்/முதலீடுகளுடன் பொருந்த வேண்டும். தேவையான ஆவணங்களை (ரசீதுகள், அறிக்கைகள், பாலிசி எண்கள்) சரியான நேரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். செப்டம்பர் 15, 2025-க்கு முன் சரியான மற்றும் துல்லியமான ITR-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வருமான வரி தாக்கல் செய்யும் காலம், வரி செலுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையான காலம். SFT அறிக்கை முறை மூலம், வரித் துறையிடம் ஏற்கனவே பெரிய நிதி பரிவர்த்தனைகளின் முழுமையான தகவல்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு பிழையும் அல்லது தவறான தகவலும் பெரிய அபராதத்திற்கு வழிவகுப்பதுடன், துறை சார்ந்த விசாரணைகளையும் அதிகரிக்கக்கூடும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: