இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் டீ கடை லாபகரமானதுதான்

பார்த்தவை, கேட்டவை, கற்றுக் கொண்டவை போன்றவற்றை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு பக்தி சாய் என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கினார்

ஆர்.சந்திரன்

நாட்டின் பிரதமரும், மாநிலத்தின் (முன்னாள்) முதல்வரும் டீ கடை நடத்தியவர்கள் என்பதால் சொல்லப்படுவதல்ல இந்த தகவல். உண்மையான செய்தி. இந்தியாவில் கிடைக்கும் மணம், குணம், நிறம், சுவை இவற்றுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது இப்போது அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ள “பக்தி சாய்” என்ற பெயரிலான டீக்கடையின் வெற்றியால் உறுதிப்பட்டுள்ளது.

Bhakti-Chai 1

பக்தி சாய் கடை

“பக்தி சாய்” டீக்கடையை நடத்துபவர் புருக் எடி என்ற பெண்மணி. 2014ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் சிறந்த தொழில்முனைவோர் என்ற பட்டத்துக்கான பரிசீலனையில் இருந்த முதல் 5 நபர்களில் புருக் எடியும் ஒருவர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் பிறந்து வளர்ந்த புருக் எடி 2002ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். மீண்டும் 2006ம் ஆண்டுதான் அமெரிக்காவுக்கு திரும்பியிருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில்தான் இவரது நாக்கு இந்தியாவில் கிடைக்கும் ‘சாயா’வுக்கு அடிமையாகி இருக்கிறது. அதனால், அமெரிக்கா சென்ற பின்னும் அந்த சுவை, மணத்துக்கு அவர் ஏங்கினார். அதனால், இந்தியாவில் இருந்தபோது பார்த்தவை, கேட்டவை, கற்றுக் கொண்டவை போன்றவற்றை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு பக்தி சாய் என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கினார். அதன்மூலம் சிறிய அளவில் தொடங்கிய வியாபாரம், மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.

Bhakti-Chai2

பக்தி சாய்

தொடர்ந்து அதில் கவனம் செலுத்திய புருக் எடி விரைவில் அதில் வெற்றியை எட்ட 2014ம் ஆண்டு, இந்திய பாரம்பரியம் கலந்த உணவுத்துறை தொழிலதிபராக இன்று உயர்ந்து நிற்கிறார்.

நாவுக்கு அடிமையானவர்கள் பற்றி பொதுவாக தவறாக கருத்துகளுடன் விமர்சனம் வரும், ஆனால், இந்திய டீயின் சுவைக்கு தனது நாவை இழந்த அமெரிக்க பெண்மணியை அது வாழ வைத்துள்ளது.

×Close
×Close