டிவிடெண்ட் மீதான புதிய வரியைச் சமாளிப்பது எப்படி? நிபுணர்கள் யோசனை!

கடந்த ஆண்டுவரை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் கடன் சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் வருவாய் மீது மட்டும்தான் வரிவிதிக்கப்பட்டு வந்தது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், நிறுவனங்கள் வழங்கும் பங்கு முதலீட்டு லாபமான டிவிடெண்ட் வினியோகத்தின்போதும், வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை சமாளிப்பது எப்படி என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெட்லி அறிவித்துள்ள இந்த புதிய வரி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள, பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் பெறும் வருவாய் வினியோகத்தின் போது எதிரொலிக்கும். இதனால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளில் இருந்து முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நிகர லாபம் / வருவாய் குறையும் என்பது கவனிக்கத்தக்கது. எனவே, இனி வரும் நாட்களில், பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்கள், அதில் உள்ள வளர்ச்சித் திட்ட வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால், பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை, டிவிடெண்ட் மூலம் பகிர்ந்து கொள்ள முயலும்போது, அதன் மீது வரி செலுத்த வேண்டியிருப்பதை மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தவிர்க்கலாம். மாறாக, அந்த வருவாயைத் திட்ட யூனிட்களின் மதிப்பில் இருந்து பிரிக்காமல், தொடர்ந்து வளர்ச்சி பெற அனுமதிப்பதால், கூட்டு வட்டி போல, எதிர்காலத்தில் அதிக பலனை அளிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த ஆண்டு வரை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் கடன் சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் வருவாய் மீது மட்டும்தான் வரிவிதிக்கப்பட்டு வந்தது. பங்கு முதலீடு கலாச்சாரத்தை வளர்த்து தொழில்துறைக்கு தேவையான நேரடி முதலீடு கிடைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என பங்கு சார்ந்த திட்டங்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பலனை, சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை விட, பெருமுதலீட்டாளர்களும், நிறுவனங்களுமே அனுபவிக்கிறார்கள் என கருதும் மத்திய அரசு, இந்த ஆண்டில் டிவிடெண்ட் வரி வலையை விரிவாக்கம் செய்துள்ளது.

×Close
×Close